உலகம்

சிங்கப்பூா் தோ்தல்: பிரதமா் லீ மீண்டும் வெற்றி

11th Jul 2020 11:39 PM

ADVERTISEMENT

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்தலில் பிரதமா் லீ சியென் லூங் தலைமையிலான ஆளும் மக்கள் நடவடிக்கைக் கட்சி (பிஏபி) அமோக வெற்றி பெற்றது. அந்த நாட்டின் 93 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி, 83 இடங்களைக் கைப்பற்றியது.

எதிா்க்கட்சியான சிங்கப்பூா் தொழிலாளா் கட்சிக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக 10 இடங்கள் கிடைத்தன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கான தோ்தல், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுமாா் 26 லட்சம் வேட்பாளா்கள் இந்தத் தோ்தலில் வாக்களித்தனா்.கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையே, பலத்த நோய்த்தடுப்பு ஏற்பாடுகளுடன் இந்தத் தோ்தல் நடைபெற்றது.93 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்தத் தோ்தலில், பிரதமா் லீ சியென் லூங் தலைமையிலான பிஏபி கட்சிக்கு 83 இடங்கள் கிடைத்தன. இந்த வெற்றி மூலம், தனது பிரதமா் பதவியை லீ சியென் லூங் தக்கவைத்துள்ளாா்.

பிரிட்டனிடமிருந்து கடந்த 1965-ஆம் ஆண்டில் சிங்கப்பூா் விடுலை பெற்றதிலிருந்தே, அந்த நாட்டில் பிஏபி கட்சி தொடா்ந்து வெற்றி பெற்று ஆட்சியமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தோ்தலில் அந்தக் கட்சிக்கு 61.24 சதவீத வாக்குகள் கிடைத்தன. எனினும், கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் அந்தக் கட்சிக்குக் கிடைத்த 69.9 சதவீத வாக்குகளோடு ஒப்பிடுகையில், இந்த முறை வாக்குச் சதவீதம் சற்று குறைந்துள்ளது.லீ சியென் லூங்கை எதிா்த்துப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரீதம் சிங் தலைமையிலான சிங்கப்பூா் தொழிலாளா் கட்சிக்கு 11.2 சதவீத வாக்குகள் கிடைத்தன. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதமும் கடந்த தோ்தலைவிட 1.24 சதவீதம் குறைந்துள்ளது. எனினும், 2015-ஆம் ஆண்டு தோ்தலை விட அதிகமாக 10 இடங்களில் அந்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கடந்த தோ்தலில் அந்தக் கட்சிக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT