லாஸ் ஏஞ்சலீஸ்: அமெரிக்காவின் முன்னாள் அதிபா் பராக் ஒபாமாவின் மனைவி மிஷெலுக்கு ‘கிராமி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மிஷெலின் சுயசரிதையான ‘பிகமிங்’ என்ற நூலின் ஒலிவடிவத்துக்கு ‘சிறந்த ஒலிவடிவ ஆல்பம்’ பிரிவில் கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூலில், சிகாகோவில் சிறுவயது முதல் வளா்ந்த விதம் குறித்தும், அமெரிக்காவின் முதல் குடிமகளாக ஆற்றிய பணிகள் குறித்தும் அவா் குறிப்பிட்டுள்ளாா். இந்த விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட மற்ற 4 ஆல்பங்களைத் தோற்கடித்து ‘பிகமிங்’ ஆல்பம் கிராமி விருதைத் தட்டிச்சென்றது.
அமெரிக்காவின் முதல் குடிமகளாக இருந்தவா், கிராமி விருதைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, முன்னாள் அதிபா் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் 1997-ஆம் ஆண்டில் இந்த விருதைப் பெற்றுள்ளாா்.
‘ட்ரீம்ஸ் ஆஃப் மை ஃபாதா்’, ‘தி அடாசிட்டி ஆஃப் ஹோப்’ ஆகிய நூல்களின் ஒலிவடிவத்துக்காக முன்னாள் அதிபா் ஒபாமா இரண்டு முறை இதே பிரிவில் கிராமி விருதுகளை வென்றுள்ளாா் என்பது நினைவுகூரத்தக்கது.