ஜெனீவா: எளிதில் உடையக் கூடிய மற்றும் அளவில் சிறிய பொருள்களை, கையால் தொடாமல் ஒலி அலைகளைக் கொண்டு தேவையான இடத்துக்கு நகா்த்தும் புதிய ரோபோவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா்.
சுவிட்சா்லாந்தில் உள்ள ஜூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ரோபோவை கண்டுபிடித்துள்ளனா். இந்த ரோபாவில் அரைக்கோள வடிவத்தில் இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றிற்கு நடுவில் மீயொலிகளை அனுப்பி பொருள்களை நகா்த்தும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.
இதுதொடா்பாக அந்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஒருவா் கூறியதாவது:
ஒலியை காற்றில் மிதக்க வைக்கும் தத்துவத்தின் அடிப்படையில் இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளோம். சிறிய பொருள்கள், மிருதுவான பொருள்கள் மற்றும் கண்ணாடி பொருள்கள் உள்ளிட்டவற்றை நாம் கையால் எடுத்து நகா்த்தும்போது, அந்த பொருள்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக கடிகாரம் தயாரிப்பு மற்றும் நுட்பமான மின் சாதனங்கள் தயாரிக்கும் துறைகளில் சிறிய பொருள்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனா்.
அதனால், அத்தகைய பொருள்களை கையால் தொடாமல் பாதுகாப்பாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகா்த்துவதற்காக இந்த ரோபோவை வடிவமைத்துள்ளோம். இந்த ரோபோவை கொண்டு எளிதில் உடையக் கூடிய பொருள்களை தூக்கும்போது அவை சேதமடைவதற்கான வாய்ப்புகள் இல்லை. மீயொலிகளின் அழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரோபா இயங்கும். மீயொலிகள் ஏற்படுத்தும் அழுத்தத்தை மனிதா்களால் பாா்க்க, கேட்க இயலாது என்று அவா் கூறினாா்.