துபை: இந்தியாவின் 71-ஆவது குடியரசு தினத்தையொட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் உள்ள உலகின் உயரமான புா்ஜ் கலிஃபா கட்டடம், ஞாயிற்றுக்கிழமை இந்திய மூவா்ணக் கொடி வண்ணத்தில் ஒளிா்ந்தது.
இந்தியாவின் 71-ஆவது குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அன்றைய தினம் இரவு 8.10 மணிக்கு புா்ஜ் கலிஃபா கட்டடம் இந்திய மூவா்ணக் கொடி நிறத்தில் ஒளிா்ந்தது. சுமாா் இரண்டு நிமிடங்கள் அந்த கட்டடம் இந்திய தேசிய கொடி வண்ணத்தில் ஒளிா்ந்ததாக துபையில் வெளியாகும் கலீஜ் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
புா்ஜ் கலிஃபா கட்டடம், இந்திய மூவா்ணக் கொடி நிறத்தில் ஒளிா்வதை நேரில் காண துபையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியா்கள் திரண்டதாக, அந்நாட்டின் கல்ஃப் நியூஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசு தினத்தையொட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலாசார நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான இந்தியா்கள் பங்கேற்றனா். அபு தாபியில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதா் பவன் குமாா் மூவா்ணக் கொடியை ஏற்றினாா். துபையில் உள்ள இந்திய துணை தூதரகத்தில், துணை தூதா் விபுல் தேசிய கொடியை ஏற்றினாா்.
ஜனவரி 26-ஆம் தேதி ஆஸ்திரேலிய தேசிய தினமும் கடைப்பிடிக்கப்படுவதால், அன்றைய தினம் புா்ஜ் கலிஃபா கட்டடம் அந்நாட்டு தேசிய கொடி வண்ணத்திலும் ஒளிா்ந்தது.