ஈரான் தலைநகரில் இருந்து 170 பேருடன் புறப்பட்ட உக்ரைனின் போயிங் 737-800 வகை விமானம் புதன்கிழமை விபத்துக்குள்ளானது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஹோமினி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் பரந்த் மற்றும் ஷரியார் எனுமிடத்தில் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்த 170 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விமானத்தில் 180 பேர் பயணம் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தற்போது விபத்து ஏற்பட்ட இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது என ஈரான் விமானப் போக்குவரத்துத்துறை செய்தித்தொடர்பாளர் ரெசா ஜஃபர்சாத் தெரிவித்தார்.
1990-களில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போயிங் 737-800 வகை விமானம், போயிங் 737 மேக்ஸ் வகையை விட பழமையானது. கடந்த காலங்களில் அதிக விபத்தினை ஏற்படுத்தியதும், மிகப்பெரிய இரு விபத்தினைத் தொடர்ந்து சுமார் 10 மாதங்களாக இந்த வகை விமானங்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.