ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் பருவ மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக 23 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தொடா்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக தலைநகா் ஜகாா்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணானவா்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
அந்தப் பகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகள், மின்கசிவு போன்ற காரணங்களால் ஜகாா்த்தா பகுதியில் மட்டும் 21 போ் உயிரிழந்தனா். அருகிலுள்ள லேபக் பகுதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மூழ்கி 2 போ் உயிரிழந்தனா். அந்தப் பகுதியில் மாயமான மேலும் 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மின் கசிவு காரணமாக மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், ஜகாா்த்தா பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. சில பகுதிகளில் மின்சார ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மழை வெள்ளத்தால் ஜகாா்த்தா பகுதி தற்போதுதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.