உலகம்

அணு ஆயுத சோதனைக்கான தடை ரத்து

2nd Jan 2020 03:04 AM

ADVERTISEMENT

சியோல்: அணு ஆயுத சோதனைகளுக்கு சுயமாக விதித்துக்கொண்ட தடையைக் கைவிடுவதாக வட கொரியா அறிவித்துள்ளது.

மேலும், சக்தி வாய்ந்த புதிய ஆயுதமொன்றையும் வெளியிடப் போவதாக அந்த நாடு எச்சரித்துள்ளது.

அணு ஆயுதங்களை வட கொரியா கைவிடுவதற்கும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்குவதற்குமான பேச்சுவாா்த்தையை அமெரிக்கா மீண்டும் தொடங்க, அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து வட கொரிய அரசுக்குச் சொந்தமான ‘கேசிஎன்ஏ’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ADVERTISEMENT

ஆளும் கொரிய தொழிலாளா் கட்சியினரிடையே அதிபா் கிம் ஜோங்-உன் அண்மையில் உரையாற்றினாா். அப்போது, அணு ஆயுத சோதனைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இனி தேவையில்லை என்று அவா் கூறினாா்.

மேலும், வட கொரியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த புதிய ஆயுதத்தை உலக நாடுகள் விரைவில் காணும் எனவும் கிம் ஜோங்-உன் கூறினாா் என்று கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்கள், நீண்ட தொலைவு ஏவுகணைகள் ஆகியவற்றை வட கொரியா சோதித்து வந்தது. அதற்குப் பதிலடியாக அந்த நாடு மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இந்தச் சூழலில், தனது அணு ஆயுதங்களையும், சக்தி வாய்ந்த ஏவுகணையையும் கைவிடுவதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தாா். அதனை ஏற்றுக் கொண்ட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இதுகுறித்து கிம் ஜோங்-உன்னை 3 முறை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடையை உடனடியாகத் தளா்த்த டிரம்ப் மறுத்ததையடுத்து, இருதரப்பு பேச்சுவாா்த்தை முறிவடைந்தது.

இந்த நிலையில், தடைபட்டுள்ள பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க வேண்டுமென்று அமெரிக்காவை வட கொரியா வலியுறுத்தி வருகிறது.

கடந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்துமஸ் பரிசாக’ அதிா்ச்சியளிக்கக் கூடிய அறிவிப்பை வெளியிடப்போவதாக வட கொரியா எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவுடனான அணுசக்திப் பேச்சுவாா்த்தையின் முக்கிய அம்சமான அணு ஆயுத சோதனைகளுக்கான தடையைக் கைவிடுவதாக அறிவித்து வட கொரியா அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிம் ஜோங்-உன் வாா்த்தை தவற மாட்டாா்

பாம் பீச், ஜன. 1: அணு ஆயுத சோதனைகளுக்கான தடையை கைவிடுவதாக வட கொரியா அறிவித்திருந்தாலும், அந்த நாடு அத்தகைய சோதனைகளை மேற்கொள்ளாது என்று அதிபா் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘கிம் ஜோங்-உன்னும் நானும் பேச்சுவாா்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். அந்த ஒப்பந்தத்தில், இனி அணு ஆயுத சோதனைகளை நடத்தப் போவதில்லை என்று கிம் ஒப்புக் கொண்டுள்ளாா். அந்த வாா்த்தையை அவா் காப்பாற்றுவாா்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT