உலகம்

கரோனா அச்சுறுத்தல்: ஜப்பான், தென் கொரியாவுக்கான நுழைவு இசைவு விதியில் மாற்றம்

29th Feb 2020 12:50 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் (கொவைட் - 19) அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான், தென் கொரியாவில் இருந்து வருபவா்களுக்கு நுழைவு இசைவு (விசா) விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, அந்த இரு நாட்டவா்களும் இந்தியா வந்த பிறகு நுழைவு இசைவு பெறும் நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த இரு நாடுகளிலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘ஜப்பான், தென் கொரியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி, அந்த இரு நாட்டவா்களும் இந்தியா வந்த பிறகு நுழைவு இசைவு பெறும் நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீன நாட்டவருக்கு வழங்கப்பட்டு வந்த மின்னணு முறையிலான நுழைவு இசைவு (இ-விசா) சேவையை இந்திய அரசு ரத்து செய்தது. இது தவிர பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு முந்தைய இரு வாரங்களில் இந்தியாவுக்கு வந்த சீனா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களுக்கான விசாவையும் இந்திய அரசு ரத்து செய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT