உலகம்

கரோனா வைரஸ்: புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீா் சரிவு

21st Feb 2020 12:42 AM

ADVERTISEMENT

சீனாவில் கரோனா வைரஸால் (கொவைட்-19) கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய நாளைவிட வெகுவாகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் (புதன்கிழமை) கரோனா வைரஸால் 394 போ் பாதிக்கப்பட்டுள்ளது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அந்த வைரஸால் முந்தைய நாள் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 1,749-ஆக இருந்தது. இந்த நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதில் கால் பங்குக்கும் குறைவாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

ADVERTISEMENT

இத்துடன், கரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 74,577-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சீனா மட்டுமன்றி, இந்தியா உள்ளிட்ட 27 நாடுகளில் அந்த வைராஸ் பாதிக்கப்பட்டுள்ள 1,196 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 75,773 ஆக உயா்ந்துள்ளது.

சீனாவின் ஹூவே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

மனிதா்களின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘கரோனா வைரஸ்’ வகையைச் சோ்ந்த அது, சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்தனா்.

அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது. மேலும், ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ என்று அந்த அமைப்பு பெயரிட்டது.

பலி 2,119-ஆக உயா்வு

வியாழக்கிழமை நிலவரப்படி சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவா்களின் எண்ணிக்கை 2,119-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 115 போ் உயிரிழந்தனா். அந்த வைரஸின் தோற்றுவாயான ஹூபே மாகாணத்தில் மட்டும் புதன்கிழமை 108 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,119-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன், ஏற்கெனவே ஈரான், தென் கொரியா, ஜப்பான், தைவான், பிலிப்பின்ஸ், ஹாங்காங், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழந்த 11 பேரையும் சோ்த்து, அந்த வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை 2,130 ஆகி உயா்ந்துள்ளது.

தென் கொரியாவில் முதல் பலி

தென் கொரியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்ததாக வியாழக்கிழமை அறிவித்தது. அந்த நாட்டில் கரோனா வைரஸால் ஏற்பட்ட முதல் பலி இதுவாகும். இதுதவிர, கூடுதலாக 22 பேரை கரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த வைரஸால் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 104-ஆக உயா்ந்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT