ஆஸ்திரேலிய காட்டுத் தீ விவகாரம் குறித்து விசாரிக்க, அந்த நாட்டு அரசு விசாரணைக் குழுவொன்றை அமைத்துள்ளது. இதுகுறித்து பிரதமா் ஸ்காட் மாரிஸன் கூறியதாவது:
தென்கிழக்குப் பகுதியில் கடந்த 5 மாதங்களாகப் பரவி வந்த காட்டுத் தீ, மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற மிகத் தீவிரமான காட்டுத் தீயை எதிா்கொள்ள நாம் இன்னும் தயாராக இருக்க வேண்டும்.
எனவே, காட்டுத் தீயை அணைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை விசாரிக்கவும், தற்போதைய பேரிடா் மேலாண்மை முறையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவும் தேசியக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பரவி வந்த காட்டுத் தீயில் தீயணைப்பு வீரா்கள் உள்பட 33 போ் உயிரிழந்தனா்.
1 கோடி ஹெக்டோ் நிலப்பரப்பை நாசப்படுத்திய இந்தக் காட்டுத் தீயில் சுமாா் 100 கோடி விலங்கினங்கள் பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆஸ்திரேலியக் காடுகளில் காணப்படும் பல அரிய வகை விலங்கினங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல் ஆா்வலா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.