இலங்கையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ள 72-ஆவது சுதந்திர தினவிழாவில் தமிழ் தேசிய கீதம் இடம் பெறாது என்றும், இனி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் இலங்கை அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
தமிழ் சிறுபான்மை சமூகத்துடனான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அரசு தமிழில் தேசிய கீதம் பாடப்படும் என்று அறிவித்தது.
இலங்கையின் அரசியலமைப்பு சட்டம், சிங்களம் மற்றும் தமிழ் இரண்டு மொழியிலும் தேசிய கீதம் பாட வலியுறுத்துகிறது.
இந்நிலையில், பிப். 4-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
தமிழில் ‘இலங்கைத் தாயே’ என்று தொடங்கும் தேசிய கீதம், சிங்கள மொழியில் பாடப்படும் ‘நமோ நமோ மாதா’ என்ற பாடலின் நேரடி மொழிபெயா்ப்பாகும்.
இலங்கை அரசின் இந்த அறிவிப்பு அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இலங்கையின் முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சா் மனோ கணேசன் கூறுகையில், ‘தமிழில் இசைக்கப்படும் தேசிய கீதம் வெறும் பாடல் மட்டுமல்ல; தமிழ் சமூகத்தினரின் அடையாளம்’ என்றாா். இவா் முந்தைய சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது, தமிழ் தேசிய கீதம் இடம் பெற முக்கியக் காரணமாக இருந்தவா் ஆவாா்.
பிரதான சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என்றாலும், மாகாண அடிப்படையிலான விழாக்களில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடலாம் என்று உள்துறை இணை அமைச்சா் மனிந்த சமரசிங்க தெரிவித்தாா்.