உலகம்

சீனர்களுக்கு இ-விசா வசதி நிறுத்தி வைப்பு: கரோனா பாதிப்பால் மத்திய அரசு நடவடிக்கை

2nd Feb 2020 04:43 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக சீனர்களுக்கு இ-விசா வழங்கும் வசதியை நிறுத்தி வைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு அறிகுறிகளுடன் 14,000 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இந்த புதிய ‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக சீனர்களுக்கு இ-விசா வழங்கும் வசதியை நிறுத்தி வைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மருத்துவம், சுற்றுலா மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு வருவது வழக்கம். அதன்படி சீனாவில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு வர விரும்பினால் அவர்கள் சீனாவிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இ.விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பரவல் காரணமாக சீனர்களுக்கு இ-விசா வழங்கும் வசதியை நிறுத்தி வைத்து மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த நடைமுறையானது சீனர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கும் பொருந்தும் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT