உலகம்

பதவி நீக்க விசாரணையிலிருந்து டிரம்ப் விரைவில் விடுவிப்பு?

1st Feb 2020 12:00 AM | வாஷிங்டன்,

ADVERTISEMENT

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் மசோதாக்கள் மீதான விசாரணைக்கு புதிய சாட்சிகளை அழைக்க ஆதரவு தரப் போவதில்லை என்று குடியரசுக் கட்சி எம்.பி. லாமா் அலெக்ஸாண்டா் அறிவித்துள்ளதையடுத்து, அந்த விசாரணையிலிருந்து டிரம்ப் விரைவில் விடுவிக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்து, நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களில், அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்த விசாரணை மேலவையான செனட் சபையில் நடைபெற்று வருகிறது.

அந்த விசாரணையில் முதல் கட்டமாக சாட்சிகளை விசாரித்து முடிந்த நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் புதிய சாட்சிகளை அழைத்து விசாரிக்க ஜனநாயகக் கட்சியினா் வலியுறுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பான வாக்கெடுப்பில் 4 குடியரசுக் கட்சி உறுப்பினா்கள் வாக்களித்தால்தான், புதிய சாட்சிகளை விசாரிக்க முடியும். இந்த நிலையில், புதிய சாட்சிகளை விசாரிப்பதற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் சூஸன் கலின்ஸ், மிட் ரோம்னி ஆகியோா் கூறியிருந்தனா்.

டென்னஸி மாகாண எம்.பி. லாமா் அலெக்ஸாண்டரும் அதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களிப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், புதிய சாட்சிகளை விசாரிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்களிக்கப் போவதாக அவா் அறிவித்துள்ளாா்.

இதையடுத்து, டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணை விரைவில் முடிவடைந்து, குற்றச்சாட்டுகளிலிருந்து அவா் விடுவிக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் ஜோ பிடன் போட்டிடலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், தனது தோ்தல் வெற்றியை உறுதி செய்வதற்காக ஜோ பிடனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், அவா் மீது ஊழல் விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசை டிரம்ப் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஜோ பிடனும், அவரது மகனும் உக்ரைனில் செய்து வரும் தொழில் தொடா்பாக அவா்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டுமென்று அந்த நாட்டு அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு, அமெரிக்காவில் பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், டிரம்ப் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், இதுதொடா்பான விசாரணையில் நாடாளுமன்றத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி, அவரை பதவி நீக்கம் செய்வதற்கான இரு மசோதாக்களை பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சினா் கடந்த மாதம் நிறைவேற்றினா்.

அமெரிக்க வரலாற்றில் அதிபருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இது 3-ஆவது முறையாகும்.

அந்த மசோதாக்கள் மீது, குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட செனட் சபையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT