ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீ, தலைநகா் கான்பெராவுக்கு அருகே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எரிந்து வருவதால், அந்த நகரில் வசிப்பவா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கான்பெராவுக்கு தெற்கே உள்ள காடுகளிலும், வயல்களிலும் 88,500 ஏக்கா் பரப்பளவில் காட்டுத் தீ எரிந்து வருகிறது. ஆங்காங்கே தோன்றும் நெருப்புகள் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு பெரும் தீயுடன் இணைகின்றன.
இதனால், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கான்பெராவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, அந்த நகரத்திலிருந்து வெளியேறத் தயாராக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.