உலகம்

அமெரிக்காவில் முதல் அதிதீவிர கரோனா: அதுவும் வெளிநாடு செல்லாதவருக்கு

30th Dec 2020 02:32 PM

ADVERTISEMENT

அமெரிக்காவில் முதல் முறையாக அதிதீவிர கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொலரடோவைச் சேர்ந்த ஒருவருக்கு அதிதீவிர கரோனா பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

20 வயதிருக்கும் அந்த நபருக்கு அதிதீவிர கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் எர்பெர்ட் கௌண்டியின் டென்வேரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு சென்றுவந்தற்கான எந்தப் பின்னணியும் இல்லாதவர் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டென்வேர் மெட்ரோ பகுதியின் ஊரகப் பகுதியாக இருக்கிறது எல்பெர்ட் கௌண்டி. 

ஆனால், கொலரடோவில் இரண்டு பேருக்கு அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் முதல் நபர் பிரிட்டனிலிருந்து திரும்பியவர் என்றும், தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது இரண்டாவது நபர் என்றும், அவர்தான் வெளிநாடு செல்லாதவர் என்றும் 'கொலடரடோ ரிப்போர்ட்ஸ்' என்ற செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

கொலரடோவில் அதிதீவிர கரோனா இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேருமே ஒரேயிடத்தில் பணியாற்றுபவர்கள் என்றும், அவர்கள் எல்பெர்ட் கவுண்டியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அவர்களது இருப்பிடம் பற்றி சுகாதாரத் துறை எந்த செய்தியும் வெளியிடவில்லை.

பழைய கரோனா வைரஸிலிருந்து அதிதீவிர கரோனா வைரஸ் மாறுபட்டிருந்தாலும், தற்போது அமெரிக்க மக்களுக்கு போடப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி, இந்த கரோனா வைரஸையும் தடுக்கும் வகையில் இருப்பதாக கொலரடோ சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை அதிதீவிர கரோனா வைரஸ் பாதிக்கப்படவில்லை என்று கருதிவந்த நிலையில், வெளிநாடு செல்லாத ஒருவருக்கு அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது, அமெரிக்காவில் புதிய வைரஸ் பரவி வருவதையே காட்டுகிறது.

தற்போது குளிர்காலம் நிலவுவதால், இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் அடுத்த கரோனா அலை வீசுமோ என்ற அச்சமும் எழுப்பப்பட்டுள்ளது. தற்போது கரோனா தடுப்பூசிக்கும் அதிதீவிர கரோனா வைரஸுக்குமான போட்டி ஏற்பட்டுள்ளது. எது வேகமாக தனது இலக்கை அடையும் என்பதே அடுத்து வரும் கேள்வியாக உள்ளது.

உடனடியாக கொலரடோ முழுவதும் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT