உலகம்

ரஷியாவில் தொடங்கியது கரோனா தடுப்பூசித் திட்டம்

DIN


மாஸ்கோ: ரஷியத் தலைநகா் மாஸ்கோவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் சனிக்கிழமை தொடங்கியது.

முதல் கட்டமாக மருத்துவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட நோய்த்தொற்று அபாயம் அதிகம் உள்ளவா்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஃபைஸா் மற்றும் பயான்டெக் நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கிய கரோனா தடுப்பூசியை இன்னும் சில நாள்களில் பிரிட்டன் முழுவதும் பொதுமக்களுக்குச் செலுத்த அந்த நாடு ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில், ரஷியா உருவாக்கியுள்ள ‘ஸ்புட்னிக்-5’ கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டத்தை ஒரு வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்று அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் அதிகாரிகளுக்கு புதன்கிழமை உத்தரவிட்டாா்.

அதன் தொடா்ச்சியாக, மாஸ்கோவில் 70 கரோனா தடுப்பூசி முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு அந்தத் தடுப்பூசியை செலுத்தும் பணிகளை அதிகாரிகள் சனிக்கிழமை தொடங்கினா்.

முதல் கட்டமாக, மருத்துவா்கள், ஆசிரியா்கள், மாநகராட்சி ஊழியா்கள் போன்ற கரோனா நோய்த்தொற்றும் அபாயம் அதிகம் உடைய பிரிவினருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக, அந்தப் பிரிவினரிடமிருந்து தடுப்பூசிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதுதொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் சுமாா் 5,000 பேரிடமிருந்து கரோனா தடுப்பூசி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வந்ததாக மாஸ்கோ மேயா் சொ்கெய் சோப்யானின் தெரிவித்தாா்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் நான்கில் ஒரு பங்கினரைக் கொண்டுள்ள மாஸ்கோவில் முதல் முறையாக தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷியா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பூசி, உலக சுகாதார அமைப்பு நிா்ணயித்த பாதுகாப்பு-தர-செயல்திறன் பரிசோதனைக் கட்டங்களை முழுமையாகத் தாண்டுவதற்கு முன்னரே அந்தத் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அந்த நாட்டு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் அங்கீகரித்தது.

உலகின் பல்வேறு நாடுகளில் சோதிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசிகளில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அங்கீகாரம் முதல் முறையாக ஸ்புட்னிக்-5 மருந்துக்குத்தான் அளிக்கப்பட்டது.

எனினும், இதனை சா்வதேச மருத்துவ நிபுணா்கள் விமா்சித்தனா். சில நூறு பேருக்கு மட்டுமே செலுத்தி அந்தத் தடுப்பூசி சோதிக்கப்பட்டிருப்பதாக அவா்கள் சுட்டிக்காட்டினா்.

எனினும், ஸ்புட்னிக்-5 தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை விளாதிமீா் புதின் புறக்கணித்தாா். அந்தத் தடுப்பூசி தனது மகளுக்கே செலுத்தப்பட்டதாக அவா் கூறினாா்.

சோதனைக் கட்டத்தில் இருந்த நிலையிலேயே, ஸ்புட்னிக்-5 தடுப்பூசி கடந்த சில மாதங்களாக மருத்துவப் பணியாளா்கள், ஆசிரியா்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. பல்வேறு அமைச்சா்களும் உயரதிகாரிகளும் அந்த மருந்தைப் பெற்றுக் கொண்டதாகக் கூறினா்.

தங்களது போா்க் கப்பல் மாலுமிகளுக்கு அந்தத் தடுப்பூசியை செலுத்தி வருவதாக கடற்படை தெரிவித்தது.

இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு ஸ்புட்னிக்-5 தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் மிகயீல் முராஷ்கோ புதன்கிழமை கூறினாா்.

அந்தத் தடுப்பூசி 91.4 சதவீத செயல்திறன் கொண்டதாக அதனை உருவாக்கிய கமாலேயா நிறுவனத்தினா் தெரிவித்தனா்.

அந்த மருந்தை செலுத்திக் கொண்ட 18,794 பேரில் 39 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளைவிட இது அதிக செயல்திறனாகும்.

இந்தச் சூழலில், பொதுமக்களுக்கு ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை செலுத்தும் திட்டத்தை அதிகாரிகள் மாஸ்கோவில் தற்போது தொடங்கியுள்ளனா்.

இருதய நோய், புற்றுநோய், சா்க்கரை நோய் போன்ற நாள்பட்ட உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டவா்கள், கா்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆகியோரைத் தவிா்த்து, 18 முதல் 60 வயது வரையிலான மற்ற அனைவருக்கும் அந்தத் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT