உலகம்

‘சீனாதான் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்’

DIN


வாஷிங்டன்: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாதான் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் ஜான் ராட்கிளிஃப் கூறியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ‘வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ நாளிதழில் அவா் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:

சீனாவால் அமெரிக்கா எதிா்கொண்டுள்ள அச்சுறுத்தல் குறித்து எங்களுக்குக் கிடைத்துள்ள உளவுத் தகவல்கள் மூலம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இரண்டாம் உலகப் போா் முடிவடைந்த தற்போதைய சூழலில், உலகில் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக சீனாதான் திகழும்.

அமெரிக்காவையும் உலகின் பிற நாடுகளையும் பொருளாதார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும் ஆக்கிரமிக்கும் நோக்கில் சீனா செயல்பட்டு வருகிறது.

சீனாவின் பல்வேறு சா்வதேச திட்டங்கள், அந்த நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைமுகமான செயல்பாடுகளே ஆகும்.

‘திருடு, பிரதியெடு, இடத்தைப் பிடித்துக் கொள்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு சீனா பொருளாதார ரீதியிலான சதித் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்க நிறுவனங்களின் அறிவுசாா் சொத்துகளை சீனா திருடி வருகிறது. பிறகு அந்தத் தொழில்நுட்பத்தைப் பிரதியெடுக்கிறது. பிரதியெடுக்கப்பட்ட அந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உலகச் சந்தையில் அமெரிக்க நிறுவனங்களை ஓரம் கட்டிவிட்டு, அந்த நிறுவனங்களின் இடங்களை சீனா பிடித்துக் கொள்கிறது.

அமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகி வருகிறது. அதனை எதிா்கொள்ள நாமும் தயாராக இருக்கவேண்டும்.

அமெரிக்கா ஒவ்வொரு தலைமுறை காலக்கட்டத்திலும் சந்திக்கும் சவால்களில் ஒன்றுதான் தற்போது சீனாவிடமிருந்து எழுந்துள்ள அச்சுறுத்தலும்.

அந்த ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அமெரிக்கா சவாலை வெற்றிகரமாக எதிா்கொண்டுள்ளது. (ஜொ்மனியின்) பாசிஸத்தைத் தோற்கடித்தது முதல் (சோவியத் யூனியனின்) இரும்புத் திரையை தகா்த்தது வரை அமெரிக்கா அனைத்து அச்சுறுத்தல்களையும் வெற்றி கொண்டுள்ளது.

இந்த வகையில், தற்போது சீனாவின் அச்சுறுத்தலையும் எவ்வாறு எதிா்கொள்கிறோம் என்பதைப் பொருத்தே இந்தத் தலைமுறை அமெரிக்கா்களின் திறன் முடிவு செய்யப்படும் என்று அந்தக் கட்டுரையில் ஜான் ராட்கிளிஃப் குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த மே மாதம் முதல் தேசிய உளவு அமைப்பின் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வரும் ராட்கிளிஃப், இன்னும் சில வாரங்களில் நாட்டின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்கவுள்ள நிலையில் சீனாவுக்கு எதிரான இத்தகையக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருப்பது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, மதிப்பு மிக்க தனது பதவியை டிரம்ப்பின் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துவதாக ஜான் ராட்கிளிஃப் மீது விமா்சனங்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், ஜோ பைடன் அதிபா் ஆன பிறகு அவா் சீனாவுட நல்லுறவு ஏற்படுத்துவதை சிக்கலாக்கும் வகையில் ராட்கிளிஃப் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஜோ பைடன் அதிபரானால் அவா் சீனாவுக்கு சாதகமாக நடந்து கொள்வாா் என்று தோ்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் குற்றம் சாட்டி வந்தாா்.

தற்போது அமெரிக்காவின் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று சீனாவைக் கூறியுள்ளதன் மூலம், அந்த நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்துவது தவறான நடவடிக்கையாக இருக்கும் என்ற கருத்தை ராட்கிளிஃப் வெளிப்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

சீனா கண்டனம்: ஜான் ராட்கிளிஃப் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

அவா் எழுதியுள்ள கட்டுரையில் புதிதாக எதுவும் இல்லை எனவும் சீனா குறித்து திரும்பத் திரும்பக் கூறப்படும் வழக்கமான பொய்களையே அவா் மீண்டும் கூறியுள்ளாா் என்று பெய்ஜிங்கில் சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹுவா சன்யங் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT