உலகம்

அறிவுசார் சொத்து, பாதுகாப்பு: அமெரிக்கா}இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

DIN

வாஷிங்டன்: அறிவுசார் சொத்துப் பரிசோதனை மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைக்கவும், அந்த அமைப்பை வலுப்படுத்துவதற்குமான அடுத்த 10 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் புதன்கிழமை கையெழுத்திட்டன.

அறிவுசார் சொத்துத் தொடர்பாக இரு நாடுகளிடையேயான முந்தைய ஒப்பந்தம் 9 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியானது. இந்நிலையில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அறிவுசார் சொத்துப் பரிசோதனை மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் புதன்கிழமை கையெழுத்திட்டன.

வாஷிங்டனில் நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தின்போது அமெரிக்க காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகம்  (யுஎஸ்பிடிஓ), இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், அமெரிக்கா சார்பில் அறிவுசார் சொத்துக்கான காப்புரிமைச் செயலர் அன்ட்ரே ஐன்கு, இந்தியா சார்பில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலர் குருபிரசாத் ஆகியோர் கையெழுத்திட்டனர். 

இதையடுத்து, அன்ட்ரே ஐன்கு கூறியது: இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் அறிவுசார் சொத்து அமைப்புகளை வலுப்படுத்தவும், வளர்ச்சியடையச் செய்யவும் உதவும்; இரு நாடுகளை மேலும் நெருக்கமாக இணைக்கும். இரு நாட்டுச் சந்தைகளிலும் செயல்படும் பல நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்கான எங்களது உறுதிப்பாட்டைப் பலப்படுத்தும்.

மனித வரலாற்றில் ஒரு சவாலான காலகட்டத்தில் இன்று சந்திக்கிறோம். என்றாலும்கூட, விஞ்ஞானம், தொழில்நுட்பம், நவீனம், உற்பத்தி ஆகியவற்றில் நம்பமுடியாத முன்னேற்றங்களைக் காண்கிறோம். இதன் மூலம் பல கோடிக்கணக்கான மக்களைப் பாதுகாக்கும் ஒரு தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்படும். 

நோய்த்தொற்று உள்பட உலகளாவிய அனைத்து சவால்களுக்குத் தீர்வுகளை கண்டறியத் தேவையான அடித்தளத்தை அறிவுசார் சொத்து பாதுகாப்புகள் உருவாக்கியுள்ளன. இவை அனைத்தும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.

காப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள், பதிப்புரிமை, புவியியல் அறிகுறிகள் உள்ளிட்ட முழு அளவிலான அறிவுசார் சொத்துத் துறைகளில் கூட்டுத் திறனை உருவாக்குவோம். செயல் திறன், உற்பத்தித் திறனை மேம்படுத்தும் கருவிகளைப் பயன்படுத்துவது உள்பட தேசிய அறிவுசார் சொத்து அலுவலகங்களின் செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த யோசனை, அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வோம்.

அறிவுசார் சொத்து அமைப்புகளின் ஆதரவுடனான இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் இரு நாடுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. உண்மையில், நமது நாடுகளின் அந்தந்த காப்புரிமை அமைப்புகள் மிக நீண்ட காலத்துக்கு முந்தையவை. அமெரிக்கா, இந்தியாவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் பெரும்பாலும் இரு நாடுகளிலும் இணைந்து பணியாற்றி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதுடன், மனித சமூகத்தை மேம்படுத்தியுள்ளனர் என்றார் அவர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு காப்புரிமை, வர்த்தக முத்திரைகள், பதிப்புரிமை, புவியியல் குறிப்புகள் மற்றும் தொழில்துறை வடிவமைப்புகள் போன்ற துறைகளில் அறிவுசார் சொத்து உரிமைகளைப் பாதுகாத்தல், பயன்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான பல கூட்டுறவு நடவடிக்கைகளுக்கு பயன்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT