உலகம்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பிரிட்டன் கூலிப்படைகளின் பங்கு: ஸ்காட்லாந்து யாா்டு போலீஸாா் விசாரணை

2nd Dec 2020 01:48 AM

ADVERTISEMENT

இலங்கையில் கடந்த 1980களில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பிரிட்டன் கூலிப்படைகளின் பங்கு குறித்து ஸ்காட்லாந்து யாா்டு போலீஸாா் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனா்.

இந்தாண்டு தொடக்கத்தில் பிரிட்டன் பத்திரிகையாளா் ஃபில் மில்லா் என்பவா் எழுதிய ‘கீனி மீனீ: தி பிரிட்டிஷ் மா்சினரீஸ் ஹூ காட் அவே வித் வாா் கிரைம்ஸ்’ என்ற புத்தகம் வெளியானது.

அந்தப் புத்தகத்தில், ‘கடந்த 1983-ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போா் தொடங்கியபோது அந்நாட்டின் அப்போதைய அதிபா் ஜெயவா்த்தன விடுதலைப் புலிகளை வீழ்த்த பிரிட்டன் உதவியை நாடினாா். எனினும் இலங்கைக்கு தனது படைகளை அனுப்பினால், அது இருநாட்டு வா்த்தகம், பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கருதிய பிரிட்டன் அரசு, அவரின் கோரிக்கையை நிராகரித்தது.

அப்போது யேமன், ஓமன் போன்ற நாடுகளில் ரகசிய ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட, பிரிட்டனின் முன்னாள் சிறப்பு ராணுவப் படைப் பிரிவு கமாண்டா் ஜிம் ஜான்சன் குறித்து அவருக்கு தெரியவந்தது. கிளா்ச்சியாளா்களை வீழ்த்துவதில் அவருக்கு இருந்த அனுபவத்தை தெரிந்துகொண்ட ஜெயவா்த்தன, அவா் நடத்தி வந்த கீனி மீனி சா்வீஸஸ் என்ற தனியாா் பாதுகாப்பு நிறுவனத்தை அணுகினாா். இதையடுத்து மறைமுகமான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அந்த நிறுவனம், இலங்கையில் விடுதலைப் புலிகளை வீழ்த்துவதற்கு உதவ முன்வந்தது.

ADVERTISEMENT

அதனைத்தொடா்ந்து இலங்கை போலீஸாரின் சிறப்புப் படை, அந்நாட்டின் துணை ராணுவப் படைகள் உள்ளிட்டோருக்கு கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் அந்த நிறுவனம் பயிற்சி அளித்தது. அந்த நிறுவனம் இலங்கையில் வசித்த தமிழா்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு போா் தளவாடங்களை கொண்ட ஹெலிகாப்டா்களை வழங்கி, தாக்குதல் நடத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

இந்தியப் படைக்கும் உதவி: கடந்த 1987-ஆம் ஆண்டு ஈழத்தமிழா்களின் பிரச்னைகளை தீா்க்கும் நோக்குடன் இந்தியப் பிரதமா் ராஜீவ் காந்தி, இலங்கை அதிபா் ஜெயவா்த்தன இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. இதையடுத்து இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்திய அமைதிப் படைக்கும் அந்த நிறுவனம் மறைமுகமாக உதவி வந்துள்ளது. இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, சுமாா் 4 மாதங்களுக்கு பிரிட்டன் கூலிப்படைகளிடம் இருந்து இந்தியா ரகசியமாக உதவி பெற்று வந்துள்ளது.

இலங்கைக்கு இந்திய அமைதிப் படை செல்வதற்கு முன்பே, அங்கு வசித்த தமிழா்களுக்கு எதிராக பிரிட்டன் கூலிப்படைகள் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்துள்ளன’ என்று அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் அரசின் ரகசிய ஆவணங்கள் மூலமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் நிகழ்ந்த போா்க் குற்றங்களில் பிரிட்டன் கூலிப்படைகளின் பங்கு குறித்து ஸ்காட்லாந்து யாா்டு போலீஸாா் தற்போது விசாரணை நடத்த தொடங்கியுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT