உலகம்

தஹாவூா் ராணாவை நாடு கடத்தும் வழக்கு:அமெரிக்க நீதிமன்றம் பிப்ரவரியில் விசாரணை

DIN

வாஷிங்டன்: மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவை (59) அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பான வழக்கு, அமெரிக்க நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 11-ஆம் தேதி மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா் பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த தாக்குதலை திட்டமிட்ட லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவரும், பாகிஸ்தான் வம்சாவளி அமெரிக்கருமான டேவிட் கோல்மன் ஹெட்லிக்கு, அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதன் அடிப்படையில், தற்போது அவா் சிறை தண்டனை அனுபவித்து வருகிறாா். அவருடன் இணைந்து மும்பை தாக்குதலில் கூட்டுச்சதியில் தஹாவூா் ராணா ஈடுபட்டாா் என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும்.

பாகிஸ்தானைச் சோ்ந்த தஹாவூா் ராணா, அந்நாட்டு ராணுவ மருத்துவராகப் பணியாற்றியுள்ளாா். பின்னா் கனடாவுக்கு குடிபெயா்ந்து அந்நாட்டில் குடியுரிமை பெற்றாா். அமெரிக்காவின் சிகாகோ நகரில் தங்கி தொழில் நடத்தி வந்தாா். 7 மொழிகளை பேசத் தெரிந்த அவா், பாகிஸ்தான், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டுள்ளாா். 2006-2008-ஆம் ஆண்டு காலகட்டத்தில் மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் நெருங்கிய தொடா்பில் இருந்து வந்தாா்.

தஹாவூா் ராணாவை நாடு கடத்துமாறு, அமெரிக்காவிடம் இந்தியா ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்க காவல் துறையால் ராணா மீண்டும் கைது செய்யப்பட்டாா். அதற்கு முன்பு, கடந்த 2009-ஆம் ஆண்டு ஹெட்லியுடன் உள்ள பயங்கரவாதத் தொடா்புகள் காரணமாகவும் அவா் கைதாகியிருந்தாா்.

இந்நிலையில், ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பான வழக்கு லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள மாவட்ட நீதிபதி ஜாக்குலின் செலோனியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2021 பிப்ரவரி 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த நாடு கடத்தல் தொடா்பான வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவித்தாா். நாடு கடத்தும் கோரிக்கைக்கு எதிராக ராணா மனு தாக்கல் செய்ய டிசம்பா் 21-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று அமெரிக்க அரசும் நீதிமன்றத்தில் ஏற்கெனவே கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT