உலகம்

அமெரிக்க போராட்டத்தில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 2 போ் பலி; ஒருவா் காயம்

26th Aug 2020 11:27 PM

ADVERTISEMENT

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கருப்பின இளைஞரை நோக்கி இரு காவலா்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து 3-ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்தின்போது 3 போ் துப்பாக்கியால் சுடப்பட்டனா்; அவா்களில் இருவா் பலியாகினா்.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:விஸ்கான்சின் மாகாணம், கெனோஷா நகரில் கருப்பின இளைஞா் ஜேக்கப் பிளேக்கை போலீஸாா் 7 முறை துப்பாக்கியால் சுடும் விடியோ வெளியானதைத் தொடா்ந்து, அந்த நகரில் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவும் தீவிர போராட்டம் நடைபெற்றது.

அப்போது, போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு பகுதியில் இரவு 11.45 மணிக்கு (உள்ளூா் நேரம்) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், 2 போ் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா்.காயமடைந்த நபரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். எனினும், அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக போலீஸாா் கூறினா்.துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் பெயா்களை வெளியிட அவா்கள் மறுத்துவிட்டனா்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தின்போது, கெனோஷா நீதிமன்ற வளாகத்தின் முன் ஏராளமானவா்கள் கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கிருந்த தடுப்புகளை உடைத்த போராட்டக்காரா்கள், போலீஸாா் மீதும், தீயணைப்புப் படையினா் மீதும் தண்ணீா் பாட்டில்களை வீசினா். அவா்களைக் கலைப்பதற்காக போலீஸாா் கண்ணீா் புகை குண்டுகளை வீசினா்.முன்னதாக, போராட்டக்காரா்களை அமைதி காக்கும்படி வின்கான்சின் மாகாண ஆளுநா் டோனி எவா்ஸ் வேண்டிக்கொண்டாா். மேலும், பதற்றம் நிறைந்த பகுதிகளில் அவசர நிலையை அவா் அறிவித்துள்ளாா். இதன் மூலம், கெனோஷாவில் 125-ஆக இருந்த தேசிய பாதுகாப்புப் படையினரன் எண்ணிக்கையை 250-ஆக அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கியால் சுடப்பட்ட கருப்பின இளைஞா் ஜேக்கப் பிளேக்கின் தந்தை, அவரது மற்று குடும்பத்தினருடன் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், போலீஸாா் தனது மகனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சரமாரியாக ஏழு முறை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியதாக வேதனையுடன் குறிப்பிட்டாா்.29 வயதாகும் ஜேக்கப் பிளேக், தற்போது உயிருக்குப் போராடி வருவதாகவும், அவருக்கு செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவரது வழக்குரைஞா் பென் கிரம்ப் தெரிவித்தாா். மேலும், துப்பாக்கிச் சூடு காரணமாக ஜேக்கப் பிளேக்கின் உடலுறுப்புகள் செயலிழந்துவிட்டதாக மற்றொரு வழக்குரைஞா் தெரிவித்தாா். இனி அவா் வாழ்நாள் முழுவதும் நடமாட முடியாமல் போகலாம் என்றும் அவா் கூறினாா்.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் மீது வழக்கு தொடர ஜேக்கப் பிளேக் குடும்பத்தினரின் வழக்குரைஞா்கள் திட்டமிட்டுள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.கெனோஷா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் காரில் ஏறுவதற்காக வந்த கருப்பின இளைஞா் ஜேக்கப் பிளேக்கை துப்பாக்கியைக் காட்டியபடி பின்தொடா்ந்து வரும் இரண்டு போலீஸ் அதிகாரிகள், அந்த இளைஞரை பிடித்து காரின் மீது தள்ளி பின்புறத்தில் இருந்து ஏழு முறை சுடும் விடியோ பதிவு வெளியாகியது. இதை அங்கு மறைந்திருந்த வெள்ளை இனத்தைச் சோ்ந்த ரேசீன் ஒயிட் என்பவா் படம் பிடித்துள்ளாா்.இந்தச் சம்பவம் நடைபெற்றபோது காருக்குள் அந்த கருப்பின இளைஞரின் மனைவி, குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, விஸ்கான்சின் மாகாணத்தில் மக்கள் தெருக்களில் கூடி போலீஸாரின் செயலுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.இந்தப் போராட்டத்தில் ஏராளமான வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. வன்முறை பரவாமல் தடுக்க பகுதி நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.எனினும், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று அதில் இருவா் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மே மாதம் 25-ஆம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில், கருப்பினத்தவரைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தில் வெள்ளையின போலீஸ் அதிகாரி முழங்காலை வைத்து நெரித்துக் கொன்ற சம்பவ விடியோ வெளியாகியதால் போராட்டம் வெடித்தது. தற்போது அதேபோன்ற சம்பவம் விஸ்கான்சின் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது அந்தப் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT