உலகம்

காவலர்களால் சுடப்பட்ட கருப்பினத்தவர்: வழக்குத் தொடுக்க குடும்பத்தினர் முடிவு

26th Aug 2020 07:48 PM

ADVERTISEMENT


அமெரிக்காவில் இரு காவலர்களால் 7 முறை சுடப்பட்ட ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினர், கெனோஷா நகர் காவல் துறைக்கு எதிராக சிவில் வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளனர். 

விஸ்கான்சின் மாகாணத்தில் கருப்பின இளைஞர் ஜேக்கப் பிளேக்கை நோக்கி இரு காவலர்கள் துப்பாக்கியால் 7 முறை சுடும் விடியோ ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியானது. இந்த சம்பவத்தைக் கண்டித்து கடந்த இரண்டு நாள்களாக போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கெனோஷா நகர் காவல் துறைக்கு எதிராக சிவில் வழக்கு தொடுக்கப்போவதாக ஜேக்கப் பிளேக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

செவ்வாய்க்கிழமை மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த ஜேக்கப் பிளேக்கின் குடும்ப வழக்கறிஞர்களில் ஒருவரான பென் கிரம்ப் இந்தத் தகவலை வெளியிட்டார். மேலும் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே பிளேக் மீண்டும் நடக்க முடியும், இந்த செய்தியாளர் சந்திப்பின்போதும் பிளேக்குக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

முன்னதாக:

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் காரில் ஏறுவதற்காக வரும் கருப்பின இளைஞர் ஜேக்கப் பிளேக்கை துப்பாக்கியைக் காட்டியபடி பின்தொடர்ந்து வரும் இரண்டு காவலர்கள், அந்த இளைஞரைப் பிடித்து காரின் மீது தள்ளி பின்புறத்தில் இருந்து ஏழு முறை சுடும் விடியோ பதிவு வெளியாகியது. இதை அங்கு மறைந்திருந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த ரேசீன் ஒயிட் என்பவர் படம் பிடித்துள்ளார். 

அமெரிக்காவில் கடந்த மே 25-ஆம் தேதி மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவரைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தில் வெள்ளையின காவலர்கள் முழங்காலை வைத்து நெரித்துக் கொன்ற சம்பவ விடியோ வெளியாகியதால் போராட்டம் வெடித்தது. தற்போது அதேபோன்ற சம்பவம் விஸ்கான்சின் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Tags : black
ADVERTISEMENT
ADVERTISEMENT