உலகம்

நிமிடத்திற்கு 10 லட்சம் டன் பனிப்பாறையை இழக்கும் கிரீன்லாந்து

21st Aug 2020 11:57 AM

ADVERTISEMENT

கிரீன்லாந்தில் ஒரு நிமிடத்திற்கு 10 லட்சம் டன் பனிப்பாறைகள் உருகிவருவதாக தனியார் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் பருவநிலை மாற்ற பாதிப்பின் விளைவுகள் குறித்து சமீபத்திய காலத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதிகப்படியாக வெளியாகும் கரியமில வாயுக்களால் புவியின் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமான துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.

அந்தவகையில் சமீபத்தில் கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கிரீன்லாந்தின் உள்ள பனிப்பாறைகள் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 532 பில்லியன் டன் அளவு கடலில் உருகியுள்ளது.

இது நிமிடத்திற்கு 10 லட்சம் டன் பனிப்பாறைகள் உருகுவதற்கு சமம் என்று ஜெர்மனியில் உள்ள ஆல்பிரட் வெஜனர் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட  இந்த ஆய்வில் கிரீன்லாந்தில் வேகமாக பனிப்பாறைகள் உருகி வருவது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

2003 ஆம் ஆண்டில் கிரீன்லாந்தில் சராசரியாக 255 பில்லியன் டன் பனிப்பாறைகள் உருகியுள்ளன. தற்போதைய தரவு 2003ஆம் ஆண்டின் இழப்பை விட மிக அதிகம் என்று இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவது சமீபத்திய ஆண்டுகளில் வேகமாக அதிகரித்து வருவதாகவும், 2019 ஆம் ஆண்டில் அதிக அளவு உருகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கிரீன்லாந்து பனிக்கட்டி முழுவதும் உருகினால், உலகின் கடல் மட்டம் ஆறு மீட்டர் உயரும் என ஆய்வாளர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : climate change
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT