இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மிக பதற்றம் நிறைந்த விமான நிலையமாகக் கருதப்படும் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் படை இல்லை என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்புப் படையினர் இல்லை என்பதை புலனாய்வுத் துறை ஆராய்ந்து, அந்நாட்டுக் காவல்துறைக்கு தகவல் அளித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவதாக அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
அதில்,"ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் மற்றும் அட்டோக் போன்ற நகரங்களுக்கு இடையேயான தொலைவு அதிகமாக இருப்பதால், ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள், உரிய நேரத்துக்கு இஸ்லாமாபாத் வருவதற்கு காலதாமதம் ஏற்படும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
"ராவல்பிண்டியில் இருந்து வெடிகுண்டு கண்டுபிடிப்புப் படை இஸ்லாமாபாத்தை அடைய ஒரு மணி நேரம் ஆகும் என்றும், இஸ்லாமாபாத் விமான நிலையத்துக்கு என்று ஒரு மோப்ப நாயும் இருக்க வேண்டும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.