வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,957 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுகிறது.
உலக நாடுகள் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முதலில் தொற்று பரவிய ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா போன்ற நாடுகளில் தொற்று பரவல் வேகமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வியாழக்கிழமை காலை நிலவரப்படி, மேலும் புதிதாக 44,957 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 57,00,931 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அதே கால அளவில் 1,263 உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,76,337 கோடியைக் கடந்தது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 30,62,331 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.