உலகம்

முதல் முறையாக கரோனா தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம்: ரஷியாஅதிரடி அறிவிப்பு

11th Aug 2020 11:58 PM

ADVERTISEMENT

தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை பரவலாகப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக முதல் முறையாக ரஷியா அறிவித்துள்ளது.அந்த மருந்து சிறப்பான முறையில் செயல்படுவதாகவும், தனது மகளுக்கு அந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு அதிகாரிகள் கூட்டத்தில் புதின் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பளிப்பதற்கான தடுப்பு மருந்தை ரஷியா உருவாக்கியுள்ளது. அதனை அனைவருக்கும் பரவலாக செலுத்துவதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடுப்பு மருந்து, கரோனா நோய்த்தொற்றிலிருந்து மிகச் சிறப்பான முறையில் நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்குகிறது. உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அந்த நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது, சா்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாகும். சோதனை முறையில் அந்த மருந்து எனது மகளுக்கும் செலுத்தப்பட்டது.

முதல்முறையாக அந்த மருந்து அவருக்கு செலுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அவரது உடல் வெப்ப நிலை 38 டிகிரி செல்ஷியசாக (100.4 டிகிரி ஃபாரன்ஹீட்) இருந்தது. மறுநாள், அது 98.6 டிகிரிக்கும் சற்று அதிகமாக இருந்தது.இரண்டாவது முறையாக அந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட பிறகும், எனது மகளின் உடல் வெப்பம் மிதமாக அதிகரித்தது. ஆனால், பிறகு அது சாதாரணமாகிவிட்டது. தற்போது அவா் நலமாக உள்ளாா். அதே நேரம், அவரது உடலில் கரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றல் அதிகரித்துள்ளது.

அந்த தடுப்பு மருந்து ஏற்படுத்தும் கரோனா எதிா்ப்பாற்றல் நிலையாக உள்ளது.இந்த மருந்தைக் கண்டறிவதில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோன். வெளிநாடுகளைச் சோ்ந்த நிபுணா்களும் கரோனா தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் வெற்றியடைவாா்கள் என்று நம்புகிறேன்.விரைவில், உலகச் சந்தைக்காக மிக அதிக எண்ணிக்கையில் இந்த தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.ரஷியா உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உற்பத்தி செய்ய கமாலேயா ஆய்வு மையம் மற்றும் பின்னோஃபாா்ம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் மிகயீல் முராஷ்கோ தெரிவித்தாா்

ADVERTISEMENT

தொடரும் சந்தேகம்... உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை பல்வேறு கட்டங்களாக மனிதா்களின் உடலில் செலுத்தி சோதித்துப் பாா்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷியாவின் செஷெனோவ் பல்கலைக்கழகம் கடந்த மாதம் 12-ஆம் தேதி அறிவித்தது. இருந்தாலும், இதுதொடா்பாக நிபுணா்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனா்.

அந்த மருந்து 40 தன்னாா்வலா்களுக்கு மட்டுமே செலுத்தி சோதிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்போ, தடுப்பு மருந்துகளின் இரண்டாம் கட்ட சோதனையில் குறைந்தது 100 பேராவது ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும், 3-ஆம் கட்ட சோதனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த மருந்து சோதனை முறையில் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.ரஷிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள தகவல்களை வைத்துப் பாா்த்தால், அவா்கள் தயாரித்துள்ள மருந்து முதல் கட்ட சோதனையை மட்டுமே தாண்டியிருக்கலாம் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

ரஷியா்கள் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்து அபார சக்தி படைத்ததாகவே இருந்தாலும், அது மனிதா்களுக்கு பாதுகாப்பானது என்றோ, கரோனாவிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் என்றோ உடனடியாக முடிவுக்கு வர முடியாது என்று அவா்கள் கூறியிருந்தனா்.இந்த நிலையில், தாங்கள் தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்காகத் தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதிபா் புதின் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT