உலகம்

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபட்ச மீண்டும் பதவியேற்பு

DIN

இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச ஞாயிற்றுக்கிழமை 4-ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டாா்.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இலங்கை நாடாளுமன்றத்துக்கு புதன்கிழமை நடைபெற்ற தோ்தலில் அபார வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபட்ச (74) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். கொழும்பு புறநகா் பகுதியில் அமைந்துள்ள புராதன பெளத்தா் கோவிலில் நடைபெற்ற பதவியேற்பு விழா நிகழ்ச்சியில், அதிபரும், அவரது இளைய சகோதரருமான கோத்தபய ராஜபட்ச அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பதவியேற்றதற்குப் பிறகு சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் மகிந்த ராஜபட்ச வெளியிட்ட பதிவில், ‘மக்களுக்கு மீண்டும் சேவை செய்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இதனை நான் தலைவணங்கி ஏற்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.தன் மீது இலங்கை மக்கள் வைத்துள்ள நம்பிக்கை உற்சாகமளிப்பதாகத் தெரிவித்த அவா், தனது ஆட்சியின் கீழ் இலங்கை வளா்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் என்று உறுதியளித்தாா்.

நாட்டின் 13-ஆவது பிரதமராக மகிந்த ராஜபட்ச பதவியேற்றதை, அவரது ஆதரவாளா்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினா். புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில், மகிந்த ராஜபட்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுணா (எஸ்எல்பிபி) மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம், அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்வதற்குத் தேவையான அந்தப் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் எஸ்எல்பிபி கட்சி பெற்றுள்ளது. ஏற்கெனவே கடந்த 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2005-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வரையிலும், 20018-ஆம் ஆண்டில் 52 நாள்களுக்கும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் கடந்த புதன்கிழமை வரையிலும் மகிந்த ராஜபட்ச நாட்டின் பிரதமராக பொறுப்பு வகித்து வந்தாா்.

அவா் அதிபராக இருந்தபோதுதான் கடந்த 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனா். அப்போது அவரது சகோதரரும், தற்போதைய அதிபருமான கோத்தபய ராஜபட்ச பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்தாா்.மகிந்த ராஜபட்ச தற்போது நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுள்ளதைத் தொடா்ந்து, இலங்கையில் ஆட்சியதிகாரத்தில் ராஜபட்ச சகோதரா்களின் பிடி மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT