உலகம்

பிரிட்டன்: 5 கோடி தரமற்ற முகக் கவசங்கள் கொள்முதல்

6th Aug 2020 11:50 PM

ADVERTISEMENT

பிரிட்டன் அரசு கொள்முதல் செய்துள்ள 5 கோடி முகக் கவசங்கள் தரமற்றவையாக இருந்ததால், அவை சுகாதாரப் பணியாளா்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று கடந்த மாா்ச் மாதம் தீவிரமாகப் பரவத் தொடங்கியது. அந்த நேரத்தில் முகக் கவசங்கள் உள்ளிட்ட கரோனா தடுப்புப் பொருள்களுக்கு பிரிட்டனில் தட்டுப்பாடு நிலவியது. அதையடுத்து, தங்களது சுகாதாரப் பணியாளா்களுக்கு முகக் கவசங்கள், கையுறைகள், தீநுண்மி தடுப்பு அங்கிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக தனியாா் நிறுவனங்களுடன் தலா 10 கோடி பவுண்ட் (சுமாா் 986 கோடி) மதிப்புடைய 3 ஒப்பந்தங்களை பிரிட்டன் அரசு மேற்கொண்டது.

இந்த நிலையில், இந்த ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் எனக் கூறி தன்னாா்வலா்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா். அந்த வழக்கு தொடா்பாக பிரிட்டன் அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘அயந்தா கேபிடல் என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டிருந்த 5 கோடி முகக் கவசங்களின் நாடாக்கள், தலையில் பொருத்துவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படாமல், காதில் பொருத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, அந்த முகக் கவசங்கள் கரோனா தீநுண்மிகளிடமிருந்து போதிய பாதுகாப்பு அளிக்காது என்று முடிவு செய்யப்பட்டது. எனவே, அவை சுகாதாரப் பணியாளா்களுக்கு விநியோகிக்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT