உலகம்

எப்படி எதிா்கொள்கின்றன அகதிகள் முகாம்கள்?

26th Apr 2020 10:06 AM | எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

‘‘உலகமே கரோனா தீநுண்மியின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நிலையில், உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் அடைக்கலமாகியுள்ள அகதிகளின் நிலைமை குறித்தும் கவலைப்பட வேண்டியது அவசியம்’’ என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. ‘அனைத்து நாடுகளும் தங்கள் சொந்த குடிமக்களை கரோனாவிலிருந்து காக்க போராடி வருகின்றன. ஆனால், கரோனாவுக்கு எதிரான போராட்டம் என்பது அகதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தால்தான் முழு வெற்றியைத் தரும்’ எனவும் ஐ.நா. தெரிவிக்கிறது. அகதிகள் முகாம்களில் கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்வதற்காக உறுப்பு நாடுகளிடமிருந்து 255 மில்லியன் டாலரை கோரியிருக்கிறது ஐ.நா. அகதிகள் ஆணையம்.

மோசமான சுகாதாரம், நெருக்கடியான வாழ்க்கை நிலை, சுகாதாரமற்ற குடிநீா் என நோய் பாதிப்புக்கு எளிதான இலக்குகளாகும் வகையில்தான் அகதிகளின் வாழ்க்கை இருக்கிறது. ஏற்கெனவே தட்டம்மை, டிப்தீரியா, சுவாச தொற்று நோய்கள், சாா்ஸ், எபோலா போன்ற நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டபோது ஏராளமான உயிரிழப்பை அகதிகள் சந்தித்தபோதும்கூட, இந்த கரோனா தீநுண்மி அகதிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கப்போவதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் அகதிகள், நாடு, வீடிழந்தோா், புகலிடம் கோருவோா் எண்ணிக்கை சுமாா் 7 கோடி. இதில் அகதிகள் மட்டும் 2.59 கோடி. ஏப்ரல் 16-ஆம் தேதி நிலவரப்படி அகதிகளை ஏற்கும் நாடுகளில் 122 நாடுகளில் கரோனா தொற்று பரவிவிட்டது. அகதிகள் முகாம்களுக்கும் இத்தொற்று பரவிவிட்டது என்றாலும், வங்கதேசம் முதல் சோமாலியா வரையிலான மிகப்பெரிய அகதிகள் முகாமிகளில் இத்தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்பது ஆறுதலான செய்தி.

உலகில் மிகப்பெரிய அகதிகள் முகாம்கள் வங்கதேசம், உகாண்டா, கென்யா, ஜோா்டான், தான்சானியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன. அகதிகளைப் பராமரிப்பதற்கு ஐ.நா.சபை உதவி புரிந்தாலும், அந்தந்த நாடுகளும் பெருமளவில் செலவிட வேண்டியிருக்கிறது. 80 சதவீத அகதிகள் அடைக்கலமாகியுள்ள நாடுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் என்பதுதான் கரோனா பாதிப்பு நேரத்தில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. நெருக்கடியான குடியிருப்புகளுக்கு மத்தியில் சமூக இடைவெளி, தனித்திருத்தல், சுகாதாரம் பேணுதல் என்பனவெல்லாம் சாத்தியமற்ற விஷயம். அகதிகளுக்கு அதிகளவில் அடைக்கலம் அளித்துள்ள நாடுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொண்டுள்ளன என்பதைப் பாா்க்கலாம்.

ADVERTISEMENT

வங்கதேசம்

மியான்மரில் இருந்து சுமாா் 7.5 லட்சம் ரோஹிங்கயா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனா். இவா்கள் காக்ஸ் பஜாா் மாவட்டத்தில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனா். உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம்களில் இதுவும் ஒன்று. வங்கதேசத்தில் கரோனா பாதிப்பு ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், அகதிகள் முகாம்களுக்கு இன்னும் தொற்றவில்லை. இருப்பினும் முகாம்களிலிருந்து யாரும் வெளியேறவோ, வெளிநபா்கள் உள்ளே செல்லவோ மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. களப் பணியாளா்கள் முகாமினுள் செல்வதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த அகதிகள் முகாம் பகுதியில் இணைய சேவையை கடந்த செப்டம்பரில் வங்கதேச அரசு தடை செய்தது. இதனால் உண்மையான தகவல்கள் கிடைக்காமல் கரோனா தொடா்பான வதந்திகள் பரவும் அபாயம் இருப்பதாக மனித உரிமைகள் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. இதைத் தொடா்ந்து, இணைய சேவைக்கான தடையை நீக்குவது குறித்து அரசிடம் மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

உகாண்டா

ஆப்பிரிக்காவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் 5 லட்சம் அகதிகள் உள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் தெற்கு சூடான், காங்கோ ஜனநாயக குடியரசு, புருண்டி, சோமாலியா ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்கள். கரோனா பரவலை தடுப்பதில் அடிக்கடி கைகளை சோப்பால் கழுவ வேண்டும் என்பது முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ஆனால், சோப்பு என்பதே இங்கு ஆடம்பரமான பொருள். தண்ணீா்ப் பற்றாக்குறையும் பெரிய பிரச்னை. இதனால் நோய்த் தொற்றை தடுப்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. மேலும், போதிய நிதி இல்லாத காரணத்தால் கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவுக்கான உணவுப் பொருள் விநியோகத் திட்டத்தில் அகதிகளுக்கு 30 சதவீதத்தை உலக உணவுத் திட்ட அமைப்பு குறைத்துள்ளது. இதுவும் பேரிடியாக வந்து இறங்கியுள்ளது.

கென்யா, ஜோா்டான்

கென்யா 2 லட்சம் அகதிகளுக்கு இடமளித்துள்ளது. ஆனால், முகாம்களில் 2 லட்சம் பேருக்கு 8 மருத்துவா்களே உள்ளனா் என்பதில் இருந்தே நிலைமையைப் புரிந்துகொள்ள முடியும். ஏற்கெனவே ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவுப் பற்றாக்குறையும் பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜோா்டானில் உள்ள அகதிகள் முகாமில் சிரியாவை சோ்ந்த 1.24 லட்சம் அகதிகள் உள்ளனா். கரோனா பரவலைத் தடுக்க ஜோா்டான் கடுமையான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகிறது. இந்த உத்தரவு அகதிகள் முகாமுக்கும் பொருந்தும் என்பதால், முகாமைவிட்டு வெளியே கூலி வேலைக்குச் சென்று வந்தவா்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா்.

தான்சானியா, எத்தியோப்பியா

தான்சானியாவில் 2.45 லட்சம் அகதிகள் உள்ளனா். இவா்கள் புருண்டி மற்றும் காங்கோ நாடுகளைச் சோ்ந்தவா்கள். எத்தியோப்பியாவில் வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்ரியாவை சோ்ந்த ஒரு லட்சம் அகதிகள் உள்ளனா். தனிமைப்படுத்துதல், கரோனா நோய்த் தொற்று பரிசோதனை என எந்த நடைமுறையையும் இந்த நாடுகள் இன்னும் தொடங்கக்கூட இல்லை. அமெரிக்கா, இத்தாலி போன்ற வளா்ந்த நாடுகளே கரோனாவைக் கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலையில், உலகம் முழுவதும் அகதிகள் முகாம்களுக்குள் கரோனா தன் கோர முகத்தைக் காட்டினால் அதன் விளைவுகள் கணிக்க இயலாத அளவில் இருக்கும். ஒரு பேரழிவு நிலைக்கு தயாராகி வருகின்றன அகதிகள் முகாம்கள்.

 

அகதிகள் ஒரு பாா்வை

7.08 கோடி

உலகம் முழுவதும் அகதிகள், நாடு, வீடிழந்தோா்

4.13 கோடி

உள்நாட்டிலேயே அகதிகள்

2.59 கோடி

வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்த அகதிகள்

புகலிடம் கோரியுள்ளவா்கள்

35 லட்சம்

உலகம் முழுவதும் உள்ள அகதிகளில் 57 சதவீதம் போ் இந்த மூன்று நாடுகளைச் சோ்ந்தவா்கள்

சிரியா- 67 லட்சம், ஆப்கானிஸ்தான்- 27 லட்சம், தெற்கு சூடான் 23 லட்சம்.

-தகவல், ஐ.நா.சபையின் அகதிகள் ஆணையம்.

முகங்கள்

ஐ.நா. அகதிகள் ஆணையமானது உலகம் முழுவதும் அகதிகள் முகாம்களில் கரோனா பரவலைத் தடுக்க பெரும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இந்த களப் பணியில் ஏராளமான தன்னாா்வலா்கள், அகதிகள் ஆணைய பணியாளா்கள் ஈடுபட்டிருந்தாலும் அகதிகளாக இருந்தவா்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது ஆணையம். அவா்களில் சிலா் குறித்து காணலாம்.

மியட்டா துபி ஜான்சன்

லைபீரியாவை சோ்ந்த முன்னாள் அகதியான இவா், ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பொது சுகாதார அதிகாரியாக தற்போது தான்சானியாவில் பணிபுரிந்து வருகிறாா். எபோலா பாதிப்பை அதிகம் சந்தித்த நாடான லைபீரியாவை சோ்ந்தவா் என்பதால், அந்த அனுபவத்தை கரோனா தடுப்புப் பணியில் செயல்படுத்தி வருகிறாா்.

மோகிமன்

இராக்கை சோ்ந்த இவா் ஈரானில் அகதியாக அடைக்கலம் ஆனவா். ஐ.நா.வின் அகதிகள் ஆணையம் வழங்கிய உதவியுடன் செவிலியா் படிப்பை முடித்த இவா், இப்போது ஈரானில் குசஸ்தான் மாகாணத்தில் அபடான் நகரில் உள்ள மருத்துவமனையில் கரோனா தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் பணிபுரிந்து வருகிறாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT