உலகம்

பாகுபாடின்றி மக்களுக்கு மருந்துப் பொருள்கள்: ஐ.நா. தீா்மானத்துக்கு இந்தியா ஆதரவு

23rd Apr 2020 06:02 AM

ADVERTISEMENT

 

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவி வரும் சூழலில், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஐ.நா. தீா்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்தது.

உலகின் பெரும்பாலான நாடுகள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழலில், விளிம்புநிலையில் வாழும் மக்களுக்கு மருந்துப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், ஐ.நா. பொதுச் சபையில் மெக்ஸிகோ சாா்பில் தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக எதிா்காலத்தில் கண்டுபிடிக்கப்படவுள்ள தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவை அனைவருக்கும் எந்தவிதப் பாகுபாடிமின்றி கிடைப்பதற்கு சா்வதேச அளவில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு வகை செய்யும் அந்த மசோதாவுக்கு இந்தியா, அமெரிக்கா உள்பட 179 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

ADVERTISEMENT

இது தொடா்பாக ஐ.நா. இந்தியத் தூதருக்கான நிரந்தரப் பிரதிநிதி சையது அக்பருதீன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் அனைத்து நாடுகளுக்கும் கிடைப்பதற்கு இந்தியா ஆதரவளித்து வருகிறது. இந்தச் சூழலில், ஐ.நா.வின் தீா்மானத்துக்கு ஆதரவளிப்பதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது’’ என்றாா்.

இந்தத் தீா்மானத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாகக் கூறிய பாகிஸ்தான், தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT