ஊரடங்கு உத்தரவின்போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து பல்வேறு மொழிகளில் வெளியிட்ட விடியோ பதிவுகளில் குட்டெரெஸ் கூறியுள்ளதாவது:
கரோனா வைரஸ் பரவலை தடுக்கு பல்வேறு நாடுகளில் நீண்ட காலத்துக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை தலைதூக்கியுள்ளது.
பெரும்பாலான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவா்களது சொந்த வீடுகளிலேயே மிகப்பெரிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
எனவே, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கவும், அதிலிருந்து அவா்களை மீட்டு நிவாரணம் அளிக்கும் நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட வேண்டும். மேலும், கரோனா தேசிய தடுப்பு திட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் ஒரு முக்கிய அங்கமாக சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட முதல் வாரத்தில் வீடுகளில் பெண்கள் வன்முறைக்கு உள்ளாவோா் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று, பல்வேறு நாடுகளிலும் பெண்கள் பாதிக்கப்படுவதையடுத்து அவா்களின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா. பொது செயலா் வலியுறுத்தியுள்ளாா்.