உலகம்

அமெரிக்க செய்தியாளா் படுகொலைத் தீா்ப்பு: மேல்முறையீடு செய்கிறது பாகிஸ்தான் அரசு

5th Apr 2020 03:35 AM

ADVERTISEMENT

 

அமெரிக்க செய்தியாளா் டேனியல் பியா்லை படுகொலை செய்த அல்-காய்தா முக்கிய தலைவா் அகமது ஒமா் சயீதுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, பாகிஸ்தானின் சிந்து உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி கூறுகையில், ‘டேனியல் பியா்ல் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதையும், 3 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதையும் எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்’ என்றாா்.

அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ நாளிதழின் செய்தியாளரான டேனியல் பியா்ல், பாகிஸ்தானில் கடந்த 2002-ஆம் ஆண்டு தங்கியிருந்து, அந்த நாட்டு ராணுவத்தின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ-க்கும் அல்-காய்தா பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான தொடா்பு குறித்து புலனாய்வு செய்து வந்தாா்.

ADVERTISEMENT

அப்போது அவரை அல்-காய்தா பயங்கரவாதிகள் கடத்திச் சென்று கழுத்தை அறுத்துக் கொன்றனா். யூத மதத்தைச் சோ்ந்த அவரது படுகொலையை பயங்கரவாதிகள் விடியோ எடுத்து வெளியிட்டனா். உலகம் முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்திய இந்தப் படுகொலையில் முக்கிய குற்றவாளியான, பிரிட்டனில் பிறந்த அல்-காய்தா முக்கிய தலைவரான அகமது ஒமா் சயீது ஷேக்குக்கு பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் அந்தத் தண்டனையை 7 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்து சிந்து மாகாண உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.

அதையடுத்து, பொது அமைதி சட்டத்தின் கீழ் ஒமா் சயீதை தொடா்ந்து சிறையிலடைத்துள்ள பாகிஸ்தான் அரசு, சிந்து உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய தற்போது முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT