உலகம்

பாகிஸ்தானிலும் தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற 300 பேருக்கு கரோனா உறுதி

5th Apr 2020 07:47 PM

ADVERTISEMENT


பாகிஸ்தானிலும் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தப்லீக் ஜமாத் அமைப்பு சார்பில் பாகிஸ்தானின் லாகூரில் கடந்த மாதம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு தனிமை மையங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் லாகூரின் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள்.

தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பஞ்சாப்பின் ராவல்பிண்டி, நன்கானா சாகேப், சர்கோதா, வெஹாரி, பைசலாபாத், கலாஷா காகு மற்றும் ரஹிம் யார் கான் மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் நோய்த் தொற்று மற்றவர்களுக்கு பரவுவதற்கான அதிகம் வாய்ப்புள்ளவர்களாகக் கருதப்படும் பெரும்பாலானோர் இந்த மையங்களில்தான் வைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதிலும் இருந்து இந்த மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானோர் கண்டறியப்பட்டு, தனிமை மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். 5 நைஜீரியப் பெண்கள் உட்பட ஜமாத்தைச் சேர்ந்த 50 பேர் மூலம் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலாம் என சந்தேகிக்கப்பட்டு அவர்கள் காசூரில் உள்ள தனிமை மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். சிந்துவில் 50 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஈரானில் இருந்து திரும்பிய 200 ஷியா யாத்ரிகர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதியானதையடுத்து, அவர்கள் பஞ்சாப் மாகாணத்தின் தேரா காஸி கான் மற்றும் மூல்தான் மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தும் பணியில் பாகிஸ்தான் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இதுவரை கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை: 2,899
பலியானோர்: 45
குணமடைந்தோர்: 208

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT