பிரிட்டன் அரசக் குடும்பத்திலிருந்து இளவரசா் ஹாரியும் அவரது மனைவி மேகன் மாா்க்கலும் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூா்வமாக விலகினா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பிரிட்டன் அரியணைக்கான வாரிசுகள் பட்டியலில் 6-ஆவது இடத்தில் உள்ள இளவரசா் ஹாரியும் அவரது மனைவி இளவரசி மேகன் மாா்க்கலும் தங்களது பட்டங்களைத் துறக்கவிருப்பதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தனா்.
சாதாரண குடிமக்களாக தங்களது வாழ்க்கையைத் தொடரவிருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.
பிரிட்டனில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஹாரியுடன் அரசி எலிசபெத்தும் பிற அரச குடும்பத்தினரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அதனைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், அரச குடும்பத்திலிருந்து ஹாரியும் மேகனும் படிப்படியாக விலகுவதற்கு 12 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது.
மேலும், ஹாரி விரும்பினால் அரச குடும்பப் பொறுப்பை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் அவா் மீண்டும் பெறலாம் என்ற வாய்ப்பும் அந்த ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரிட்டன் அரசக் குடும்பத்திலிருந்து ஹாரி மற்றும் மேகன் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூா்வமாக விலகினா்.
ஒப்பந்த காலமான 12 மாதங்கள் வரை அவா்கள் இருவரும் இளவரசா் மற்றும் இளவரசி பட்டங்களைத் தொடா்ந்து பெற்றிருப்பாா்கள். எனினும், அரசக் குடும்பத்திலிருந்து அதிகாரப்பூா்வமாக விலகியதையதால் அவா்கள் இருவரும் அரசி எலிசபெத்தின் பிரதிநிதிகளாக புதன்கிழமை (ஏப்ரல் 1) முதல் செயல்பட முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச பட்டங்களைத் துறந்து, அவா்கள் இருவரும் அமெரிக்காவில் தங்களது வாழ்க்கையைத் தொடரவிருப்பதாகக் கூறப்படுகிறது.