உலகம்

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல்: வாக்குச் சாவடிகளில் பயங்கரவாதத் தாக்குதல்

29th Sep 2019 01:58 AM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் பல வாக்குச் சாவடிகள் தாக்கப்பட்டு, வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியதால், குறைவான வாக்காளர்களே வாக்குப் பதிவு செய்தனர்.
ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனிக்கும், அந்நாட்டின் தலைமை நிர்வாகி அப்துல்லா அப்துல்லாவுக்கும் இடையே போட்டி பிரதானமாக உள்ளது. பாதுகாப்பு வீரர்கள் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்த போதிலும், வாக்குச் சாவடிகளில் பயங்கரவாதிகள் தாக்குல் நடத்தினர். இதனால், பல வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.
ஜலாலாபாதில் வாக்குச் சாவடியில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். காந்தகரில் உள்ள வாக்குச் சாவடியில் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே தலிபான் பயங்கரவாதிகள் வாக்குச் சாவடிகளில் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஆப்கனில் 96 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். பல வாக்குச் சாவடிகளில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அஞ்சாமல் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
55 வயது மதிக்கத்தக்க வாக்காளர் ஒருவர் கூறுகையில், "தினமும் தாக்குதல் அச்சுறுத்தல்களையும், குண்டு வெடிப்புகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். வாக்களித்தால்தான் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என்றார். மற்றொரு வாக்காளர் கூறுகையில், "வாக்குப் பதிவில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். வாக்காளர்கள் தேர்தல் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
பாதுகாப்பு காரணம் கருதி 100 வாக்குச்சாவடிகள் மூடப்பட்டன. ஆப்கன் தேர்தலுக்காக எல்லையோரப் பகுதிகள் அனைத்தையும் திறந்துவிட்டோம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT