கர்தார்பூர் வழித்தடச் சாலை நவ.9-இல் திறக்கப்படும் : பாகிஸ்தான் அதிகாரி தகவல்

கர்தார்பூர் வழித்தடச் சாலை நவ.9-இல் திறக்கப்படும் : பாகிஸ்தான் அதிகாரி தகவல்

சீக்கிய பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டு வரும் கர்தார்பூர் வழித்தடச் சாலை வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்று பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது.

சீக்கிய பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டு வரும் கர்தார்பூர் வழித்தடச் சாலை வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்று பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது.
இதுதொடர்பாக கர்தார்பூர் வழித்தட திட்ட இயக்குநர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
கர்தார்பூர் திட்டத்தின் 86 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. அடுத்த ஒரு மாதத்தில் மீதமுள்ள பணிகள் நிறைவடைந்துவிடும் என்பதால், வரும் நவம்பர் 9-ஆம் தேதி இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்துவிடும். கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்ட முதல் சில நாள்களுக்கு, இந்த வழித்தடம் வழியாக ஒரு நாளைக்கு 5,000 பக்தர்கள் இந்தியாவில் இருந்து அனுமதிக்கப்படுவர். சீக்கிய யாத்ரீகர்களின் வசதிக்காக 76 இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யாத்திரை தொடங்கிய சில நாள்களுக்கு இந்த முறை பின்பற்றப்படும். அதன் பின்னர், ஒரு நாளைக்கு 10,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதற்கேற்றவாறு சோதனை மையங்கள் அதிகரிக்கப்படும் என்று கூறினார். 
சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
இந்த யாத்திரை மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கும் வகையில், பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். 
இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்து வருகின்றன. குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பரில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த வழித்தடம் வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் போதிலும், கர்தார்பூர் வழித்தடத்தைத் திறப்பதில் இரு நாட்டுத் தலைவர்களும் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com