இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் பின்னடைவு: இம்ரான் கான் ஒப்புதல்

"இந்தியாவுடன் நேரடிப் போர் ஏற்பட்டால், அதில் பாகிஸ்தான் பின்னடைவைச் சந்திப்பதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை.
இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் பின்னடைவு: இம்ரான் கான் ஒப்புதல்


இஸ்லாமாபாத்,: "இந்தியாவுடன் நேரடிப் போர் ஏற்பட்டால், அதில் பாகிஸ்தான் பின்னடைவைச் சந்திப்பதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை. இருப்பினும், நாங்கள் சரணடையாமல், சாகும் வரை போராடுவோம்' என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் கூறினார். 

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுதொடர்பாக அல் ஜஸீரா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: 

நாகரீகம் மிக்க அண்டை நாடுகளாக வாழும் வகையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான்-இந்தியா இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சமீபத்தில் பாகிஸ்தான் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதற்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை. 

பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) தடைப் பட்டியலில் பாகிஸ்தானை இடம்பெறச் செய்ய இந்தியா முயற்சிக்கிறது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றால் பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். 

அதன்மூலம் எங்களை நெருக்கடியான நிலைக்குத் தள்ளி, பின்னடைவை ஏற்படுத்த இந்தியா முயற்சிக்கிறது. பாகிஸ்தானுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதே இந்திய அரசின் கொள்கை என்பதை புரிந்துகொண்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்ட நிலையில், இனியும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய வகையில் காஷ்மீரை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. 

இத்தகைய சூழலில் இந்தியாவுடனான நேரடி போருக்கு வாய்ப்புகள் இருப்பதாக உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அவ்வாறு நேரடிப் போர் ஏற்பட்டால், அதில் பாகிஸ்தான் பின்னடைவை சந்திக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி ஒரு நிலை வந்தால் சரணடைவதைக் காட்டிலும் சுதந்திரத்துக்காக நாங்கள் சாகும் வரை போரிடுவோம்.  பாகிஸ்தான் எந்தச் சூழலிலும் போரை முதலில் தொடங்காது. நான் போருக்கு எதிரானவன். போரினால் எந்த பிரச்னையையும் தீர்க்க இயலாது என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன். 

அணு ஆயுதம் வைத்துள்ள இரு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால், அது அணு ஆயுதப் போராக மாறும் வாய்ப்பு இருக்கிறது. அதன் தாக்கத்தால் ஏற்படும் பேரழிவு இந்திய துணைக் கண்டத்தை தாண்டிய வகையிலும் இருக்கும். 

எனவே தான் அதை தடுக்கும் வகையில் ஐ.நா. சபையை நாடினோம். ஒவ்வொரு சர்வதேச அமைப்பையும் நாடி வருகிறோம் என்று இம்ரான் கான் கூறினார். 

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியாவுடனான தூதரக, வர்த்தகத் தொடர்புகளை பாகிஸ்தான் துண்டித்துக் கொண்டது.  ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தலையிடவும், இந்தியாவுக்கு நெருக்கடி தரவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளையும் அந்நாடு நாடி வருகிறது. எனினும், அதில் பாகிஸ்தானுக்கு போதிய பலன் கிடைக்கவில்லை. 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, இந்தியாவின் இறையாண்மைக்கு உள்பட்ட முடிவு என்றும், இது உள்நாட்டு விவகாரம் என்றும் இந்தியா உறுதிபடத் தெரிவித்துவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com