வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

புதிய விசா விதிகளை அறிவித்தது பிரிட்டன்: இந்திய மாணவர்கள் பயனடைவர்

DIN | Published: 12th September 2019 03:05 AM


பிரிட்டனில் பயிலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய விசா விதிகளை அரசு அறிவித்துள்ளது.

பிரிட்டனில் பட்ட மேற்படிப்பு பயிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படிப்பு முடிந்த பிறகு, அதே விசாவைப் பயன்படுத்தி, இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்கி பணி புரியலாம் அல்லது வேலை தேடலாம்.  இந்த விசா அனுமதியை, கடந்த 2012-ஆம் ஆண்டு, அப்போதைய உள்துறை அமைச்சரான தெரஸா மே ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த விசா நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக பிரிட்டன் அரசு புதன்கிழமை அறிவித்தது. அதன்படி, பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்கள், வரும் 2020-21-ஆம் கல்வியாண்டில் இருந்து புதிய விசா அடிப்படையில் வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம். இதனால், பிரிட்டனுக்கு மேற்படிப்பு பயிலச் செல்லும், இந்திய மாணவர்கள் உள்பட அனைத்து வெளிநாட்டு மாணவர்களும் பயனடைவர்கள்.

இதுகுறித்து பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டனில் அறிவியல், கணிதம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பட்டப் படிப்பு பயிலும் திறமை மிக்க வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் தொழிலை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கான பணி அனுபவத்தை இங்கேயே பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் அரசின் இந்த அறிவிப்பு, இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்று இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் டொமினிக் ஆஸ்கியுத் கூறினார். அவர் மேலும் கூறுகையில், பிரிட்டனில் படிப்பு முடிந்த பிறகும் இந்திய மாணவர்கள் தங்குவதற்கு அனுமதிப்பதால், அவர்களால் அனுபவத்தையும், திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, நிகழாண்டில் பிரிட்டனில் கல்வி பயிலுவதற்காக இந்தியாவில் இருந்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சீன மகளிர் இலட்சியம் பற்றிய வெள்ளையறிக்கை
இதைச் செய்தால்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையாம்: இம்ரான் கான் திட்டவட்டம்
இரட்டை பாண்டாக்கள் பிறப்பு
நவம்பர் 16-இல் இலங்கை அதிபர் தேர்தல்
பிரதமர் மோடி-சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை:   மாமல்லபுரத்தில் சீரமைப்புப் பணிகள் தொடங்கின