வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

கனடாவில் நாடாளுமன்றம் கலைப்பு: அடுத்த மாதம் 21-இல் தேர்தல் அறிவிப்பு

DIN | Published: 12th September 2019 03:04 AM


கனடா நாட்டு நாடாளுமன்றம் பிரதமர் ஜஸ்டின் டுரூடோவின் பரிந்துரைப்படி கலைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்கக் கண்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடான கனடாவில் கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியின் ஜஸ்டின் டுரூடோ பிரதமராகப் பதவியேற்றார். 
கனடா நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாகும். அதன்படி அடுத்த மாதம் நாடாளுமன்றத்துக்கு தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கனடா கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட்டுக்கு பிரதமர் ஜஸ்டின் டுரூடோ பரிந்துரைத்தார். அதை ஏற்று நாடாளுமன்றத்தை ஜூலி பேயட் கலைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் 21-இல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல்வேறு கட்சிகளும் பிரசாரத்தில் இறங்கி மக்களைக் கவரும் அறிவிப்புகளை அள்ளி வீசி வருகின்றன. 
தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் டுரூடோ தனது லிபரல் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இம்முறையும் லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக ஜஸ்டின் டுரூடோ மீண்டும் முன்னிறுத்தப்பட உள்ளார். அவருக்கு இத்தேர்தலில் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஷீர் கடும் நெருக்கடியை அளிப்பார் என்று கூறப்படுகிறது. ஏனெனில், ஜஸ்டின் டுரூடோ ஆட்சியில் ஊழல் விவகாரங்கள் வெடித்ததோடு பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. எனவே கடந்த முறை போல் அவர் இம்முறை சுலபமாக வெற்றிக்கனியைப் பறிக்க முடியாத நிலை காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ஜக்மீத் சிங்கின் என்டிபி கட்சிக்கு 13 முதல் 14 சதவீத மக்கள் ஆதரவு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சீன மகளிர் இலட்சியம் பற்றிய வெள்ளையறிக்கை
இதைச் செய்தால்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையாம்: இம்ரான் கான் திட்டவட்டம்
இரட்டை பாண்டாக்கள் பிறப்பு
நவம்பர் 16-இல் இலங்கை அதிபர் தேர்தல்
பிரதமர் மோடி-சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை:   மாமல்லபுரத்தில் சீரமைப்புப் பணிகள் தொடங்கின