உலகம்

யுரேனியம் செறிவூட்டலை ஈரான் தீவிரப்படுத்துகிறது: உறுதி செய்தது ஐ.நா. குழு

10th Sep 2019 12:59 AM

ADVERTISEMENT


சக்தி வாய்ந்த சாதனங்கள் மூலம் யுரேனியம் செறிவூட்டும் பணியை தீவிரப்படுத்தப் போவதாக ஈரான் கூறியதை ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, தங்களது அணுசக்தி மையங்களில் ஈரான் அதிக சக்தி வாய்ந்த யுரேனியம் செறிவூட்டும் சாதனங்களை நிறுவியுள்ளது.
ஈரானில் ஆய்வு மேற்கொண்ட ஐ.நா. கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், ஐஆர்-6 ரகத்தைச் சேர்ந்த 30 சாதனங்களும், ஐஆர்-6எஸ் ரகத்தைச் சேர்ந்த 3 சாதனங்களும் அணுசக்தி மையங்களில் பொருத்தப்பட்டுள்ளதைக் கண்டனர்.
அவை தவிர, ஏராளமான ஐஆர்-4 மற்றும் ஐஆர்-5 வகை யுரேனியம் சுத்திகரிப்பு சாதனங்களையும் அவர்கள் கண்டனர்.
அந்தச் சாதனங்கள் சோதனைக்குத் தயாராக இருந்தாலும், அவை எதுவும் இதுவரை சோதித்துப் பார்க்கப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பிலும் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தி எரிபொருளாகப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குறிப்பிட்ட அளவே ஈரான் கையிருப்பு வைத்திருக்க வேண்டும், அணுசக்தி மையங்களில் யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டக் கூடாது, முதல் தலைமுறையைச் சேர்ந்த ஐ.ஆர்.1 ரக சாதனங்களைக் கொண்டு மட்டுமே யுரேனியம் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
அந்த நிபந்தனைகளை ஈரானும் பின்பற்றி வந்தது.
இந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினார்.
அதற்குப் பதிலடியாக, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணுசக்தி ஒப்பந்தம் வரையறுத்துள்ளதைவிட அதிக அளவில் கையிருப்பு வைப்பதாகவும், 3.67 சதவீதத்துக்கும் அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டப்போவதாகவும் ஈரான் அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக, அணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுக்கு அணுசக்தி ஒப்பந்தம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவித்த ஈரான், அதனைத் தொடர்ந்து யுரேனியம் சுத்திகரிப்பில் சக்தி வாய்ந்த புதிய தலைமுறை சாதனங்களைப் பயன்படுத்தப் போவதாக சனிக்கிழமை அறிவித்தது.
அதனை ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தற்போது உறுதி செய்துள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT