உலகம்

பேச்சுவார்த்தை ரத்தானதால் அமெரிக்காவுக்குப் பேரழிவு: தலிபான்கள் மிரட்டல்

10th Sep 2019 01:00 AM

ADVERTISEMENT


தங்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து செய்ததால் அமெரிக்காதான் அதிக பேரழிவைச் சந்திக்கும் என்று தலிபான் பயங்கரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவுடன் தொடந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை நிறைவுகட்டத்தை அடைந்து, இரு தரப்பினருக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படும் சூழல் உருவாகியிருந்தது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த முறிவால் எங்களைவிட அமெரிக்கத் தரப்பினருக்குத்தான் அதிக இழப்பு ஏற்படும். கடந்த 18 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் போராட்டத்தின் மூலம், அமெரிக்க ஆக்கிரமிப்பை அகற்றும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்பதை
நிரூபித்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும், இரு தரப்பிலும் கொள்கை அளவில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அமலுக்கு வரும் எனவும் ஆப்கன் விவகாரத்துக்கான அமெரிக்கத் தூதர் ஸல்மே காலிஸாத் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறுவதற்கும், அதற்குப் பதிலாக தலிபான்கள் பயங்கரவாதத் தாக்குதலைக் கைவிடுவதற்கும் அந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஆப்கன் தலைநகர் காபூலில், வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த வியாழக்கிழமை தற்கொலை கார் குண்டுவெடிப்பு நடத்தினர். இதில் அமெரிக்க வீரர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, தலிபான் தலைவர்கள், ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி ஆகியோருடன் மேரிலாண்ட் மாகாணம், கேம்ப் டேவிட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், தலிபான் பயங்கரவாதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்கா - தலிபான்கள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்குத் தயாராக இருப்பதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT