உலகம்

யேமன் பிரிவினைவாதிகளுக்கு சவூதி எச்சரிக்கை

7th Sep 2019 01:26 AM

ADVERTISEMENT


யேமனின் தெற்குப் பகுதியில் கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ள ஐக்கிய அரபு அரேபிய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யேமன் உள்நாட்டுப் போரில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் கூட்டாக செயல்பட்டு வரும் நிலையில், அமீரக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்கு சவூதி அரேபியா நேரடி எச்சரிக்கை விடுத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சவூதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
யேமனின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க யார் சதி செய்தாலும், அதை சவூதி அரேபியாவின் பாதுகாப்புக்கும், ஸ்திரத்தன்மைக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலாகவே  கருதுகிறோம்.
யேமனைப் பொருத்தவரை, சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அதிபர் மன்சூர் ஹாதியின் அரசைத் தவிர வேறு யாருக்கும் அந்த நாட்டில் உரிமையில்லை.
வேறு படைகளைப் பயன்படுத்தியோ, மிரட்டியோ இந்த நிலையை மாற்றியமைக்க முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்தச் செய்தி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யேமனில் சவூதி அரேபியா ஆதரவு பெற்ற அதிபர் மன்சூர் ஹாதியின் படையினரைப் போலவே,  ஐக்கிய அரபு அமீரக ஆதரவு பெற்ற தெற்கு யேமன் பிரிவினைவாதிகளும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
எனினும், மன்சூர் ஹாதி அரசின் தற்காலிக தலைநகரமாகத் திகழும் ஏடன் நகரம் உள்பட முக்கிய பகுதிகளை அரசுப் படையினரிடமிருந்து தெற்கு யேமன் பிரிவினைவாதிகள் கடந்த மாதம் கைப்பற்றினர்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அரசுப் படையினருக்கு ஆதரவாக பிரிவினைவாதிகள் மீது சவூதி கூட்டுப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
யேமன் உள்நாட்டுப் போரில் ஏற்கெனவே ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில், தற்போது அரசுப் படையினருக்கு எதிராக தெற்கு யேமன் பிரிவினைவாதிகள் திரும்பியுள்ளது இந்தப் போரில் மேலும் ரத்தக் களறியை ஏற்படுத்தும் என்று பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், பிரிவினைவாதிகளுக்கு சவூதி அரேபிய அரசு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT