உலகம்

பிரெக்ஸிட்டை ஒத்திவைக்கும் பேச்சுக்கே இடமில்லை: போரிஸ் ஜான்ஸன் திட்டவட்டம்

4th Sep 2019 01:03 AM

ADVERTISEMENT


ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான (பிரெக்ஸிட்) கெடுவை நீடிக்கக் கோரும் பேச்சுக்கே இடமில்லை என்று அந்த நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் பிரிட்டனுக்கு ஐரோப்பிய யூனியன் சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான ஒப்பந்தம் இல்லாமலேயே அந்த அமைப்பிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டால், அதனைத் தடுத்து நிறுத்த எம்.பி.க்கள் திட்டமிட்டு வரும் சூழலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லண்டனிலுள்ள பிரதமர் இல்லம் எதிரே அவர் கூறியதாவது: திட்டமிட்டபடி அடுத்த மாதம் 31-ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட் நடவடக்கை நடந்தே தீரும். எந்தச் சூழலிலும் அந்தக் காலக் கெடுவை நீடிக்க ஐரோப்பிய யூனியனிடம் கோரும் பேச்சுக்கே இடமில்லை.
ஐரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த மாதம் 31-ஆம் தேதிக்குள் வெளியேறுவோம் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை வாபஸ் பெறுவதற்கான எந்த முயற்சியையும் ஏற்கமாட்டேன்.
மேலும், பிரெக்ஸிட் திட்டத்தையே கைவிடவும் நான் அனுமதிக்க மாட்டேன்.
நாடாளுமன்றத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்வோம் என்று உறுதியாக நம்புகிறேன்.
அதுவரை எங்களது குழுவினர் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவார்கள்.
முன்கூட்டியே தேர்தல்: இந்த விவகாரத்தில் எம்.பி.க்கள் குழப்பத்தை ஏற்படுத்தி, நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டாம்.
அத்தகைய தேர்தலை நான் விரும்பவில்லை என்றார் அவர்.
பிரெக்ஸிட்டுக்குப் பிறகும், பிரிட்டனின் அங்கமாகத் திகழும் வடக்கு அயர்லாந்து பகுதிக்கும், தனி நாடாகத் திகழும் அயர்லாந்துக்கும் இடையே வர்த்தக எல்லை எழுப்பினால், அது அந்தப் பகுதியின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் இரு பகுதிகளிடையே வர்த்தக ஒருங்கிணைப்பைத் தொடரும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது.
அதையடுத்து, தனது பிரதமர் பதவியை ராஜிநாமா தெரசா மே-வுக்குப் பதிலாக போரிஸ் ஜான்ஸன் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார்.
பிரெக்ஸிட் விவகாரத்தில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட அவர், ஒப்பந்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் இறுதித் தேதியான அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதில் உறுதியாக உள்ளார்.
எனினும், அத்தகைய ஒப்பந்தம் இல்லாமல் யூனியனிலிருந்து விலகினால் பிரிட்டன் பொருளாதாரம் கடுமையான பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
எனவே, ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் ஏற்படும் சூழல் உருவானால், அதனை நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அவர்களுக்கு ஆளும் கட்சி எம்.பி.க்களும் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT