உலகம்

அமெரிக்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை கிடையாது: ஈரான்

4th Sep 2019 01:01 AM

ADVERTISEMENT


அமெரிக்காவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்றும், பேச்சுவார்த்தையில் பிற வல்லரசு நாடுகளும் பங்கேற்க வேண்டும் என்றும் ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:
அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்.
காரணம், அமெரிக்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஏற்கெனவே பல முறை சொல்லிவிட்டோம். அதையே இப்போது மீண்டும் கூறுகிறோம். அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா மட்டுமன்றி, பிற வல்லரசு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திதான் மேற்கொண்டோம்.
அந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா நீக்கியது குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தையில் அந்த நாடுகளும் பங்கேற்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா அல்லாத பிற நாடுகள் வரும் வியாழக்கிழமைக்குள் போதிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், அணுசக்தி ஒப்பந்தத்தின் மேலும் சில அம்சங்களை மீறுவோம் என்று ரெளஹானி எச்சரிக்கை விடுத்தார்.
தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்று ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் விலக்கிக் கொள்வதற்கும் வகை செய்யும் அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
எனினும், அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், பதற்றத்தைத் தணிப்பதற்காக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல்வேறு பல தலைவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், ஈரான் அதிபர் ரெளஹானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT