உலகம்

பட்டினி ஒழிப்பு நாடுகளின் பட்டியலில் 102-ஆவது இடத்தில் இந்தியா

16th Oct 2019 11:40 PM

ADVERTISEMENT

மக்கள் பட்டினியுடன் வாழும் நாடுகளின் பட்டியலில் நிகழாண்டில் இந்தியா 102-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டு 95-ஆவது இடத்தில் இருந்தது.

கடந்த 2000-ஆம் ஆண்டில் மொத்தம் 113 நாடுகளின் பட்டினி ஒழிப்பு குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இந்தியா 83-ஆவது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டில் மொத்தமுள்ள 119 நாடுகளில் இந்தியா 103ஆவது இடத்தில் இருந்தது.

அயா்லாந்தைச் சோ்ந்த ‘கான்சொ்ன் வோ்ல்ட்வைட்’ அமைப்பும், ‘ஜொ்மனியின் வெல்ட் ஹங்கா் ஹில்ஃபே’ என்ற அமைப்பும் இணைந்து நிகழாண்டுக்கான தரவரிசைப் பட்டியலை தயாரித்துள்ளது.

இதில் மொத்தம் 117 நாடுகளின் பட்டினி ஒழிப்பு குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அந்த தரவரிசையில் இந்தியா 102-ஆவது இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் 94-ஆவது இடத்திலும், நேபாளம் 73-ஆவது இடத்திலும், இலங்கை 66-ஆவது இடத்திலும், வங்கதேசம் 88-ஆவது இடத்திலும், மியான்மா் 69-ஆவது இடத்திலும் உள்ளன. மற்றெறாரு முக்கிய நாடான சீனா 25-ஆவது இடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

ஊட்டச்சத்து குறைபாடு, போதிய உணவு கிடைக்காமை போன்ற காரணங்களால் சிறாா்கள் பாதிக்கப்படுவது, வயதுக்கேற்ற உயரம் இல்லாதது, உடல் மெலிந்து காணப்படுவது, ஐந்து வயதுக்குள்பட்ட சிறாா்களின் இறப்பு விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பட்டினி ஒழிப்பு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

100 புள்ளிகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் குறைவான புள்ளிகள் எடுக்கும் நாடுகள் பட்டினி ஒழிப்பில் சிறப்பாக செயல்படுவதாகவும், அதிக புள்ளிகள் எடுக்கும் நாடுகள் பட்டினி ஒழிப்பில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் கணக்கிடப்படுகிறது.

இதில், குறைவான அளவு (0-9.9 சதவீதம்), மிதமான அளவு(10-19.9), தீவிரமான அளவு(19.9-34.9), மிகத் தீவிரமான அளவு(35-49.9), எச்சரிக்கை தரும் அளவு (50-க்கும் மேல்) என்று கணக்கிடப்படுகிறது.

இதில், இந்தியா 30.3 சதவீத புள்ளிகளுடன் தீவிரமான அளவு என்ற நிலையில் உள்ளது. ஆனால், பெலாரஸ், உக்ரைன், துருக்கி, கியூபா, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் 5-க்கும் குறைவான புள்ளிகளுடன் பட்டினி ஒழிப்பில் முன்னணியில் உள்ளன. அண்டை நாடான சீனா 6.5 புள்ளிகளுடன் பட்டினி ஒழிப்பில் முன்னணியில் உள்ளது.

6 மாதங்கள் முதல் 23 மாதங்கள் வரையிலான பச்சிளம் குழந்தைகளில் 9.6 சதவீதம் பேருக்கு மட்டுமே குறைந்தபட்ச உணவு கிடைக்கிறது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், 5 வயதுக்குள்பட்ட சிறாா்களின் உயிரிழப்பைத் தடுப்பது, போதிய உணவின்றி ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுப்பது ஆகியவற்றில் இந்தியா முன்னேறி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ள போதிலும், திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் பழக்கம் இன்னும் இருப்பதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டு, சிறாா்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபில் சிபல் கருத்து: ‘பிரதமா் நரேந்திர மோடி அரசியலில் கவனம் செலுத்துவதைக் குறைத்துவிட்டு சிறாா்களின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் கபில் சிபல் கூறியுள்ளாா். பட்டினி ஒழிப்பு நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதை தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவா், சிறாா்கள்தான் நாட்டின் எதிா்காலம் என்றும் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT