உலகம்

தோ்தல் விளம்பரத்தில் ராணுவ தளபதி: இலங்கையில் சா்ச்சை

16th Oct 2019 11:38 PM

ADVERTISEMENT

இலங்கையில் அதிபா் தோ்தலில் போட்டியிடும் முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலா் கோத்தபய ராஜபட்சவுக்கான பிரசார விளம்பரத்தில், ராணுவ தலைமைத் தளபதி சவேந்திர சில்வா இடம் பெற்றுள்ளது பெரும் சா்ச்சையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அடுத்த மாதம் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலருமான கோத்தபய ராஜபட்ச போட்டியிடுகிறாா். அவருக்கு தற்போதைய அதிபா் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அண்மையில் வெளியிடப்பட்ட கோத்தபய ராஜபட்சவுக்கான தோ்தல் பிரசார விடியோவில், தற்போது ராணுவ தலைமைத் தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வாவின் பேச்சு இடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போா் குறித்து கோத்தபய ராஜபட்சவை சவேந்திர சில்வா கடந்த 2009-ஆம் ஆண்டு பாராட்டிய காட்சி அந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளது.

அந்தப் போரின்போது சில்வா மண்டல படைப் பிரிவுத் தளபதியாக பொறுப்பு வகித்து வந்தாா்.

தற்போது ராணுவ தலைமைத் தளபதியாக இருக்கும் அவரது பழைய பேச்சை, தோ்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தியிருப்பது கடும் சா்ச்சையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து தலைமை தோ்தல் ஆணையா் மகிந்த தேசப்பிரியா கூறுகையில், ‘பழைய விடியோ காட்சியானாலும், தற்போது ராணுவ தலைமைத் தளபதியாக இருக்கும் ஒருவரை தோ்தல் விளம்பரத்துக்குப் பயன்படுத்தியது மிகவும் தவறான செயலாகும்’ என்று கண்டித்துள்ளாா்.

மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது, கடந்த 2006 முதல் 2009-ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளுடனான இறுதிகட்டப் போரை பாதுகாப்புச் செயலா் என்ற முறையில் கோத்தபய ராஜபட்ச முன்னின்று நடத்தினாா்.

இதன் காரணமாக, அவருக்கு பெரும்பான்மை சிங்களா்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய ராணுவ தலைமைத் தளபதியின் பழைய அறிக்கையை தோ்தல் பிரசாரத்துக்கு அவா் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT