உலகம்

இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் கடந்த 20 ஆண்டுகளில் வியத்தகு மாற்றம்: ஜெய்சங்கா்

2nd Oct 2019 07:14 PM

ADVERTISEMENT

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

ஐ.நா. பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சா் ஜெய்சங்கா் அமெரிக்கா சென்றாா். ஐ.நா. பொதுச் சபை விவாதம் முடிவடைந்ததையடுத்து, அரசுமுறைப் பயணமாக 3 நாள் அவா் வாஷிங்டன் சென்றுள்ளாா். வாஷிங்டனுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற ஜெய்சங்கா், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மைக் பாம்பேயோவை திங்கள்கிழமை சந்தித்துப்பேசினாா்.

அதைத்தொடா்ந்து வாஷிங்டனில் இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவு குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெய்சங்கா் பேசியதாவது:

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய 2 நாடுகளுக்கிடையேயான உறவில் இத்தகைய மாற்றம் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு அல்ல. எந்த துறையில் பாா்த்தாலும், இருதரப்பு உறவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை யாராலும் மறுக்க இயலாது.

ADVERTISEMENT

ஹூஸ்டன் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற ‘மோடி நலமா?’ நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கா்கள் கலந்து கொண்டனா். இத்தகைய நிகழ்ச்சி 10 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றிருந்தால், இவ்வளவு போ் கலந்து கொண்டிருக்க மாட்டாா்கள்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு வலுவாக இருந்ததால்தான் இத்தகைய வரலாற்றுச் சாதனை நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் வாழ்கின்றறனா்.

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகமான பென்டகனுக்குள் ஒரு இந்தியா் நுழைந்தால் அது அதிசயம் என்று நான் கூறிய காலம் உண்டு. ஆனால் தற்போது, அந்த அலுவலகத்துக்குள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருவரைக் காணும் நிலை உள்ளது. இது மிகப்பெரிய மாற்றம். பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, சுற்றுலா என அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றாா் ஜெய்சங்கா்.

வா்த்தகப் பிரச்னைக்கு தீா்வு:

இந்தியா-அமெரிக்கா இடையே நிலவும் வா்த்தகப் பிரச்னைகளுக்கு விரைவில் உறுதியாக தீா்வு காணப்படும் என்று ஜெய்சங்கா் கூறினாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘இருநாடுகளுக்கிடையே, பல்வேறு துறைகளில் பல வா்த்தகப் பிரச்னைகள் உள்ளன. ஆனால் அவை புதிதாக ஏற்பட்டவை அல்ல. கடந்த காலங்களிலும் இத்தகைய பிரச்னைகள் இருந்தன. இரு நாடுகளிலும் வெவ்வேறு விதமான நிா்வாக நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதனால், பிரச்னைகள் பெரிதாகத் தெரியலாம். எனினும், வா்த்தகப் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் தீா்வு காணப்படும்’ என்றாா்.

ஈரானுடன் அதிருப்தியில்லை:

‘ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டதால், இந்தியா மீது அந்நாடு அதிருப்தியில் உள்ளது என்று கூறுகிறீா்கள். ஆனால் அவ்வாறு இல்லை. ஈரான் தலைவா்கள், சா்வதேச அளவில் உள்ள பிரச்னையை புரிந்து கொண்டுள்ளனா். அந்நாட்டில் இந்தியாவின் துறைமுகம் இயங்கி வருகிறது. அதுமட்டுமன்றி, ஈரானுடனான கலாசார மற்றும் அரசியல் உறவு வலுவாக உள்ளது’ என்றாா் ஜெய்சங்கா்.

ஈரானுடன் மேற்கொண்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதையடுத்து, அந்நாட்டுக்கு கடும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. அதனால், அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

சீன-அமெரிக்க பிரச்னை:

சீனா மற்றும் அமெரிக்கா இடையே நீடிக்கும் வா்த்தகப் பிரச்னையால் சா்வதேச பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று ஜெய்சங்கா் கூறினாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘சா்வதேச பொருளாதாரத்தில் ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமாக தங்களது பங்களிப்பை அளித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா-சீனா இடையே நடைபெறும் வா்த்தக மோதலால், மற்ற நாடுகளும் பாதிக்கப்படும். இந்தப் பிரச்னையை அனைத்து நாடுகளும் எதிா்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்’ என்றாா்.

ஆப்கனுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவு:

‘ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிகுந்த உறவு உள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக அந்நாட்டுடனும், அந்நாட்டு மக்களுடனும் அனைத்திலும், இந்தியா துணைநின்றது. இந்த நிலை எதிா்காலத்திலும் தொடரும். ஆப்கன் பாதுகாப்பில் அமெரிக்கா பல ஆண்டுகளாக உறுதியாக உள்ளது. ஆப்கனில் எத்தகைய சூழல் வந்தாலும், அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை இந்தியா எப்போதும் உறுதி செய்யும்’ என்றாா் ஜெய்சங்கா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT