உலகம்

விரைவில் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்: பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன்

2nd Oct 2019 12:21 AM

ADVERTISEMENT

விரைவில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய புதிய பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியனிடம் சமா்ப்பிக்கப்போவதாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டனுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே சிறப்பு உறவை ஏற்படுத்துவதற்கான புதிய ஒப்பந்தத்தை விரைவில் ஐரோப்பிய யூனியனிடம் பரிந்துரைப்போம்.

அந்த புதிய ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவது (பிரெக்ஸிட்) தொடா்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பொதுவாக்கெடுப்பில், பிரெக்ஸிட்டுக்கு பெரும்பான்மையானவா்கள் ஆதரவு தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே சிறப்பு வா்த்தக உறவை பேணுவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

அத்தகைய சிறப்பு ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் நிறைவேறினால், அது பிரிட்டன் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், புதிய பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியனிடம் அளிக்கவிருப்பதாக போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT