உலகம்

'தினமும் ஆபிஸூக்கு லேட்டா போறீங்களா?' - போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் 'மைக்ரோ மொபிலிட்டி'

2nd Oct 2019 12:36 PM | Muthumari

ADVERTISEMENT

 

பரபரப்பாக இருக்கும் நகர்ப்புற வாழ்க்கையில் மக்களுக்கு முக்கியப்  பிரச்னையாக இருப்பது போக்குவரத்துதான். நகர்ப்புறத்தில் பெரும்பாலானோர் பணிக்குச் செல்லும் நிலையில் அவர்கள் போக்குவரத்து நெரிசல்கள், நெரிசலான சாலைகள், வானிலையின் மாறுபாடுகள், வாகனங்களில் இரைச்சல் சத்தம் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்டவைகளை கடந்து அலுவலகத்திற்குச் செல்வது பலருக்கும் சவாலானதாகவே இருக்கிறது. இதையும் தாண்டி, அவசரத்தில் போக்குவரத்து விதிமுறை மீறினால் ஆயிரக்கணக்கில் அபராதங்கள் செலுத்த நேரிடுகிறது. 

தற்போதைய நவீன காலகட்டத்தில் இதற்கு முக்கியத் தீர்வாக பார்க்கப்படுவது 'மைக்ரோ மொபிலிட்டி'. 5 கி.மீ தொலைவிற்கு பயணிக்க எளிய, சுற்றுசூழல்- நட்பு ரீதியான உபகரணங்களை மக்களுக்கு வழங்குவது.

ADVERTISEMENT

பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவுக்கு  இ-ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள், மிதிவண்டிகள் போன்ற சிறிய வாகனங்களை மக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்வதன் மூலம் முக்கிய நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கலாம். 

பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையத்தில் இருந்து அலுவலகத்திற்குச் செல்ல வெகு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது என்றும், நேரம் கருதியும் பலர் பைக் அல்லது காரை உபயோகிக்கின்றனர். 4 அல்லது 5 பேர் செல்லக்கூடிய காரில் ஒருவர் மட்டும் பயணிப்பதையும் நாம் பார்க்கிறோம்.

எனவே, முக்கிய இடங்களில் இருந்து மிதிவண்டிகள்,இ-பைக் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் போது நெரிசல் குறையும். மக்களும் திட்டமிட்ட நேரத்தில் அலுவலகத்திற்குச் செல்ல முடியும். மக்கள் அதிகம் வாழும் பெரு நகரங்களில் சுற்றுச்சூழல் மாசுபாடு கட்டுப்படுத்தப்படும். தூய்மையான, அமைதியான ஒரு சூழல் ஏற்படும். 

தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 5 கி.மீ தொலைவுக்கு செல்ல வாடகை மிதிவண்டி சேவை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திலும், மொபைல் செயலி மூலமாக க்யூ.ஆர்.கோடு வைத்து மிதிவண்டியை எடுத்துக்கொள்ளலாம். எந்த ஒரு ரயில் நிலையத்திலும் ஒப்படைத்து விட்டு மொபைல் செயலி மூலமாகவே பணத்தை செலுத்தலாம். இதுபோன்று வாடகை பைக் மற்றும் ஆட்டோ வசதியை கொண்டு வர சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இதேபோன்று கேரளா, பெங்களுருவிலும் 'மைக்ரோ மொபிலிட்டி' செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மக்கள் அதிகம் வாழும் முக்கிய நகரங்களில் இது முழுமையாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைக்கப்படும். 

மெக்கின்சி என்ற நிறுவனம் நடத்திய ஒரு  ஆய்வில் 'மைக்ரோ மொபிலிட்டி' எதிர்காலத்தில் மிகவும் பிரபலமாக, அதிக வருவாய் ஈட்டக்கூடியதாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கணக்கெடுப்பில் அமெரிக்காவில் மைக்ரோ மொபிலிட்டி சந்தையின் மதிப்பிடப்பட்ட அளவு சுமார் 200 முதல் 300 பில்லியன் டாலர்கள் மற்றும் ஐரோப்பாவின் அளவு 100 முதல் 150 பில்லியன் டாலர்கள் ஆகும்.

அதேபோன்று சீனாவில் சுமார் 30 முதல் 50 பில்லியன் டாலர்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மைக்ரோ மொபிலிட்டி சேவை ஆசியாவில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

உலக நாடுகள் பலவும் இதனை பின்பற்றி சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கலாமே..!

ADVERTISEMENT
ADVERTISEMENT