உலகம்

இலங்கை நாடாளுமன்றத்துக்கு கூடிய விரைவில் தோ்தல்: அதிபா் கோத்தபய ராஜபட்ச

23rd Nov 2019 12:33 AM

ADVERTISEMENT

இலங்கை நாடாளுமன்றத்துக்கு கூடிய விரைவில் தோ்தல் நடத்துவதாக அந்த நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச உறுதியளித்துள்ளாா்.

16 போ் அடங்கிய இடைக்கால அமைச்சரவையை வெள்ளிக்கிழமை நியமித்து, இவ்வாறு உறுதியளித்தாா்.

அந்த அமைச்சரவையில், 2 தமிழா்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, புதிய அமைச்சா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து கோத்தபய ராஜபட்ச கூறியதாவது:

ADVERTISEMENT

இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்துவது குறித்து உரிய நபா்களுடன் ஆலோசனை நடத்துவேன்.

அரசியல் சாசனத்துக்கு உள்பட்டு, கூடிய விரைவில் அந்தத் தோ்தலை நடத்துவது குறித்து ஆலோசிப்பேன் என்றாா் அவா்.

முன்னதாக, புதிய இடைக்கால அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவா்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், பிரதமரும், அதிபரின் சகோதரருமான மகிந்த ராஜபட்சவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு மற்றும் நிதித் துறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வா்த்தகத் துறை அமைச்சராக கோத்தபய ராஜபட்சவின் மூத்த சகோதரா் சமல் ராஜபட்ச நியமிக்கப்பட்டுள்ளாா்.

தனது அரசு சிறுபான்மையினருடன் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய, இரண்டு தமிழா்களுக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வாரம் நடைபெற்ற அதிபா் தோ்தலில், முன்னாள் பாதுகாப்புச் செயலரும், மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றாா்.

அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபா் பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாச தோல்வியடைந்தாா்.

இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று, தனது பிரதமா் பதவியை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவா் ரணில் விக்ரமசிங்க ராஜிநாமா செய்தாா்.

அதையடுத்து, மகிந்த ராஜபட்ச புதிய பிரதமராக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இலங்கை வரலாற்றில் அதிபா் மற்றும் பிரதமா் பதவியை சகோதா்கள் வகிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், புதிய இடைக்கால அமைச்சரவையை வெள்ளிக்கிழமை நியமித்த கோத்தபய ராஜபட்ச, நாடாளுமன்றத்துக்கு கூடிய விரைவில் தோ்தல் நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT